அதானி எக்ஸ் தளம்
இந்தியா

வெளிநாட்டில் குறைவு.. வாரிவழங்கிய இந்திய வங்கிகள்.. ஆண்டுக்கு 6% அதிகரிக்கும் அதானியின் கடன்கள்!

2023-24ஆம் நிதியாண்டில் அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவு 6 சதவீதம் வரையில் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன.

86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதுடன், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இதற்கிடையே ‘ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்’ என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும்” என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

அதானி

தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்பு, நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவற்றால் அதானி குழும பங்குச் சந்தைகளின் மதிப்பும் உயர்வைக் கண்டது. அதன்படி, சில கடன்களை அடைத்ததாகவும் கடந்த கால செய்திகள் தெரிவித்தன. இந்த நிலையில், 2023-24ஆம் நிதியாண்டில் அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவு 6 சதவீதம் வரையில் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதானி குழுமத்தின் சில முக்கியமான வர்த்தக பிரிவில் செய்யப்பட்ட விரிவாக்கம், முதலீடுகள் காரணமாகக் கடன் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சிக்னல் இல்லை.. சவூதி பாலைவனத்தில் வழிதவறிப் போன இந்திய நபர்.. நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம்!

அதன்படி, கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, இந்திய வங்கிகள் அதானி குழுமத்திற்கு மொத்தம் ரூ. 88,100 கோடி கடன் வழங்கியுள்ளன. இது அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவான ரூ. 2,41,394 கோடியில் சுமார் 36% ஆகும். இது, முந்தைய கடன் தொகையைவிட அதிகம். முன்னதாக, அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.70,213 கோடி கடன் வழங்கப்பட்டிருந்தது. அப்போதைய நிலையில் இக்குழுமத்தின் மொத்த கடன் இருப்பான ரூ.2,27,248 கோடியில் உள்நாட்டு வங்கிகளின் கடன் பங்கீடு 31% ஆகும். இதன்மூலம் ஒரு வருடத்தில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதானி குழுமத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா பேங்க், HDFC பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் ICICI பேங்க் உள்ளிட்ட வங்கிகள் கூடுதலான கடன்களை அளித்துள்ளன. ஆனால், இதுகுறித்து எந்த வங்கிகளும் பதிலளிக்கவில்லை.

கெளதம் அதானி

இந்திய வங்கிகள் அதானி குழுமத்திற்கு கடன்களை வாரி வழங்கியிருக்கும் அதேவேளையில், அக்குழுமத்தின் வெளிநாட்டுக் கடன்கள் ஓரளவு குறைந்துள்ளது. அதானி குழுமம் உலக நாடுகளில் இருக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து பெறும் கடன் மார்ச் 31, 2024 முடிவில் ரூ. 63,781 கோடியிலிருந்து ரூ. 63,296 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும் உலகளாவிய மூலதனச் சந்தைகளிலிருந்து பெற்றுள்ள கடன் ரூ. 72,794 கோடியிலிருந்து ரூ. 69,019 கோடியாகக் குறைந்துள்ளது.

வெளிநாட்டுச் சந்தையில் இருந்து பெறப்படும் கடன் குறைந்துள்ள வேளையில், உள்நாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தில் பெறப்படும் கடன் அதிகரித்துள்ளது. அதாவது, வெளிநாடுகளில் வாங்கிய கடனைக் குறைத்துவிட்டு இந்தியாவில் அதிக கடன் வாங்கியுள்ளது அதானி குழுமம். மேலும் மார்ச் முடிவுக்குள் அதானி குழுமத்தின் மொத்த கடன் வருடாந்திர அடிப்படையில் சுமார் 6% அதிகரித்துள்ளது. என்றாலும், அதானி குழுமத்தின் வருட லாபம் 45 சதவீதம் உயர்ந்து, நிதியாண்டில் ரூ.82,917 கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”எந்த வேலையும் இல்லை.. ஆனா, சம்பளம் ரூ.3 கோடி” - விமர்சனத்திற்கு உள்ளான அமேசான் ஊழியரின் பதிவு!