இந்தியா

சரிவுக்கு பின் 2வது நாளாக அதானி குழும பங்குகள் மீண்டும் உயர்வு - காரணம் இதுதான்!

சரிவுக்கு பின் 2வது நாளாக அதானி குழும பங்குகள் மீண்டும் உயர்வு - காரணம் இதுதான்!

webteam

ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாகச் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், நேற்றும், இன்றும் ஏற்றம் கண்டு வருகின்றன.

அதானி குழுமம் தொடர் சரிவு

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால், ஆசியாவிலேயே மிகப் பிரபலமான தொழில் நிறுவனமான அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், உலக அளவில், அதானி விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாய் வெடித்து வருகிறது. இந்தியாவில், நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கப்பட்டு வருவதுடன், அதானி குறித்து பிரதமர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இன்று மீண்டும் உயர்ந்த அதானி குழும பங்குகள்

இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த இரு நாட்களாக சரிவில் முடிந்த நிலையில், இன்று சென்செக்ஸ், நிப்டி ஆகியன ஏற்றம் கண்டன. அதிலும், அதானி குழுமத்தின் பங்குகள் இன்று காலை வணிகத்தின்போது உயர்வுடன் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று அதானி குழும பங்குகள் 25 சதவிகிதம் வரை ஏற்றம் கண்டிருந்த நிலையில், இன்று அதானி என்டர்பிரைசஸ் பங்குகள், 13 சதவிகித விலை உயர்வை கண்டன. அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் 7.24 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.593.35 ஆக உயர்ந்தது. இதனால் சந்தை மதிப்பும் ரூ.1.28 லட்சம் கோடியானது.

அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,314 ஆகவும், அதானி பவர் 4.99 சதவிகிதம் உயர்ந்து ரூ.182 ஆகவும், அதானி வில்மர் பங்கு 4.99 சதவிகிதம் உயர்ந்து ரூ.419.35 ஆகவும் இருந்தது. என்டிடிவி, அம்புஜா சிமெண்ட், ஏசிசி நிறுவனப் பங்குகளும் இன்று ஏற்றத்தைக் கண்டன.

கடந்த 10 நாட்களில் அதானியின் இழப்பு

மொத்தத்தில், அதானி குழுமத்துக்குச் சொந்தமான 8 நிறுவனப் பங்குகள் உயர்வைக் கண்டன. அதேநேரத்தில், 2 நிறுவனப் பங்குகள் சரிவையும் கண்டிருந்தன. மும்பை பங்குச் சந்தையில் இன்று அதானி எண்டர்பிரைசஸ் 13.07 சதவிகித உயர்வைக் கண்டு ரூ.2,038க்கு வணிகமானது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.32 லட்சம் கோடியாக உயர்ந்தது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையால் கடந்த 10 நாட்களில் 9 லட்சம் கோடி ரூபாயை இழந்த அதானி குழுமம், மீண்டும் எழுச்சி பெறுவதையடுத்து, முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது.

திடீர் விலை உயர்வுக்குக் காரணம்

”2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் காலக்கெடு முடிவடையும் பங்குகளுக்கு முன்கூட்டியே கடனைச் செலுத்துவதாகத் தெரிவித்திருந்ததே, இந்த விலையேற்றத்துக் காரணம்” என சந்தை வர்ணனையாளர் ஸ்ரீநாத் ஸ்ரீதரன் தெரிவித்திருந்ததும், ”அதானி குழும பத்திரங்கள் தகுதியுடையவைதான்” என JP Morgan நிறுவனம் கூறியிருந்ததும்தான் அதானி குழும விலையேற்றத்துக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2024க்குள் கட்டவேண்டிய கடனில் ஒரு பகுதியான 1,114 மில்லியன் அமெரிக்க டாலர்களை (9223 கோடி ரூபாய்) முன்கூட்டியே செலுத்துவோம் எனத் தெரிவித்திருந்த நிலையில் நேற்று மீண்டும் ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன்கள் முன்கூட்டியே செலுத்தப்படும் என அறிவித்திருந்தது. இதையடுத்தே, நேற்றும் இன்றும் அதானி குழும பங்குகள் ஏற்றம் கண்டுவருகின்றன.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டி

இதற்கிடையே அதானி குழுமத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள், நிதி அமைப்புகள் குறித்துப் பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், இன்று மாத நாணயக் கொள்கை (MPC) முடிவுகளை வெளியிட்ட பின்பு ஆர்பிஐ கவர்னர் மற்றும் MPC குழு அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், “வங்கிகள் ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு வைத்து கடன் அளிப்பது இல்லை. ஆனால் வங்கிகள் ஒரு நிறுவனத்தின் பலம் மற்றும் அடிப்படையை நம்பி கடன் அளிக்கிறது. இந்திய வங்கிகளின் அப்ரைசல் முறை கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் மேம்பட்டு உள்ளது. தற்போது இந்திய வங்கி அமைப்பின் பலம், அளவு ஆகியவை சிறப்பாக உள்ளது. ஆர்பிஐ ஏற்கனவே அதானி குழுமம் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. தற்போது கூடுதலாகப் பேச எதுவுமில்லை. மேலும் ஒரு தனிப்பட்ட விஷயத்தைப் பொதுத்தளத்தில் ஆர்பிஐ எப்போதும் விவாதிக்காது” என தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்