சோமி அலி, லாரன்ஸ் பிஷ்னோய் எக்ஸ் தளம்
இந்தியா

”நாம் பேசலாமா?”- பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அழைப்புவிடுத்த பிரபல நடிகை!

Prakash J

மும்பையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் படுகொலைக்கு, சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது. இதையடுத்து அக்கும்பல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது பல வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், நடிகையும் பெண்கள் உரிமை ஆர்வலருமான சோமி அலி, கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஸ்னோயை ஜூம் அழைப்பில் பேச அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், லாரன்ஸ் பிஷ்னோயை (சகோதரர்) என்று குறிப்பிட்டு, அவருடன் வீடியோ அழைப்பில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு | எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி மோதல்.. மத்திய அரசு அதிரடி முடிவு!

கேங்ஸ்டருடன் பேச விருப்பம் தெரிவித்த சோமி அலி

மேலும் அவர், ”ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்குச் செல்ல வேண்டும்” என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ”நீங்கள் ஜெயிலில் இருந்துகூட ஜூம் அழைப்புகள் செய்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டு பார்த்திருக்கிறேன். அதனால் நான் உங்களுடன் பேச விரும்புகிறேன். சில விஷயங்கள் ராஜஸ்தானில் எப்படிச் சாத்தியம் என்று எனக்கு தெரியப்படுத்துங்கள். அதனால் நான் உங்களுடன் சில விஷயங்களை விவாதிக்க விரும்புகிறேன். அதை எப்படி செய்வது என்று சொல்லுங்கள். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம் ராஜஸ்தான். நான் என்னுடைய பிரார்த்தனைக்காக உங்கள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஆகையால் இது என்னுடைய சொந்த நலனுக்கானது. ஆகவே, என்னை நம்புங்கள், நான் நன்றியுள்ளவராக இருப்பேன். தயவுசெய்து உங்கள் மொபைல் எண்ணைப் பகிரவும்; அதை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.

நீங்கள் ஜெயிலில் இருந்துகூட ஜூம் அழைப்புகள் செய்கிறீர்கள் என்று நான் கேள்விப்பட்டு பார்த்திருக்கிறேன். அதனால் நான் உங்களுடன் பேச விரும்புகிறேன்.
நடிகை சோமி அலி

பாபா சித்திக்கின் படுகொலைக்குப் பிறகு சோமி அலியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது படுகொலைக்குப் பிறகு நடிகர் சல்மான் கான் வீட்டுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உ.பி.| சமையல் பாத்திரத்தில் சிறுநீர்.. உணவில் கலப்பா? கேமரா வைத்த முதலாளி.. வசமாக சிக்கிய பணிப்பெண்!

சல்மான் கானுக்காக மன்னிப்பு கேட்ட சோமி அலி!

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடிகை சோமி அலி, மான்கள் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானை மன்னிக்குமாறு பிஷ்னோய் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “தவறுகள் நடந்தாலும், அவை அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கக்கூடாது. எல்லோரும் தவறு செய்கிறார்கள், ஆனால் ஒரு நபர் கொல்லப்படுவதற்கு அல்லது தீங்கு விளைவிக்கத் தகுதியானவர் என்று அர்த்தமல்ல. இன்று, நானும் தவறு செய்கிறேன்; நீங்களும் தவறு செய்கிறீர்கள். நாம் வாழும்வரை தவறு செய்துகொண்டே இருப்போம். அது மனித இயல்பு. இது நமக்குள் இயல்பாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. யாரும் நேர்மையானவர்கள் அல்ல. ஆனால் நீங்கள் ஒருவரைக் கொல்ல முயற்சித்தால் அல்லது அவர் மீது தோட்டாக்களை வீசினால் நீங்கள் எல்லை மீறுகிறீர்கள். நான் வேண்டுமென்றே வேட்டையாடுவதை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த நிகழ்வு பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. 1998ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடைபெற்றபோது சல்மான் கான் மிகவும் இளையவராக இருந்தார். ஆகவே, பிஷ்னோய் சமூகத்தினர் இதை மறக்கும்படி வேண்டுகிறேன். சல்மான் கான் தவறு செய்திருந்தால், அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து அவரை மன்னிக்கவும்” எனத் தெரிவித்திருந்தார்.

அவரது வேண்டுகோள், பிஷ்னோய் சமூகத்தை பிளவுபடுத்தியது. அகில் பாரதிய பிஷ்னோய் மகாசபாவின் தலைவர் தேவேந்திர புடியா, ”சல்மான் கான் தங்களை அணுகி, எங்கள் கோயிலுக்கு வந்து, வனவிலங்கு பாதுகாப்பு சத்தியம் செய்து மன்னிப்பு கேட்டால் அதுகுறித்து பரிசீலிப்போம்” எனத் தெரிவித்தார். ஆனால், அச்சமூகத்தின் மிகவும் கடினமான பிரிவான பிஷ்னோய் புலிப் படை (BTF), புடியாவின் இந்தக் கருத்தை எதிர்த்திருந்தது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா|ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்ட கணவர் குடும்பம்.. இளம் பெண் மருத்துவர் எடுத்த சோக முடிவு!

சல்மான் கானுக்கும் சோமி அலிக்கும் என்ன தொடர்பு?

என்றாலும், அதற்குப் பிறகும் சல்மான் கான் மன்னிப்பு கேட்காததால், கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். தவிர, அவரது கும்பல் சல்மானைக் கொல்லும் முயற்சியிலும் ஈடுபட்டது. இந்த நிலையில்தான் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும் மூத்த அரசியல்வாதியுமான பாபா சித்திக், லாரன்ஸ் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்தே சல்மான் கான் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையேதான் நடிகை சோமி அலி, லாரன்ஸ் பிஷ்னோயுடன் பேச விருப்பம் தெரிவித்துள்ளார். நடிகை சோமி அலியும் சல்மான் கானும் காதலித்ததாகவும் பிறகு, அவர்களுடைய காதல் இடையில் நின்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அவர் சல்மான் கானுக்கு ஆதவாகப் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த நேரத்தில் அவர் விடுத்துள்ள அழைப்புப் பதிவு உண்மையாகவே லாரன்ஸுடன் பேச விரும்புகிறாரா அல்லது அந்த கும்பலைக் கிண்டலடிக்கும் நோக்கத்தில் வெளியிட்டுள்ளார் என பயனர்கள் பல்வேறு விதமாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ”எனக்கு பெண் பார்க்கவும்” - பெட்ரோல் போடவந்த எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்த பம்ப் ஊழியர்! #ViralVideo