வேட்டையன் இசை வெளியீட்டு விழா முகநூல்
இந்தியா

”தமிழ் மொழிகூட தெரியாமல் கையில் காசு இல்லாமல்..”-வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் கண்கலங்கிய ரஜினி!

PT WEB

”கன்னட மொழியை தவிர எனக்கு வேறு எந்த மொழியும் தெரியாது கையில் காசு இல்லாமல் தான் ரயிலேரி தமிழகத்திற்கு வந்தேன்..என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு நன்றி.” என்று கண்கலங்கி பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

வேட்டையன் இசை வெளியீட்டு விழா சென்னை சென்ட்ரல் அருகே உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (20.9.2024) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது

என்னை வாழ வைத்த தெய்வங்ளான தமிழக மக்களுக்கு அன்பான வணக்கங்கள்.

ஜெயிலர் ஆடியோவிற்கு பின்பு நான் மீண்டும் இந்த இடத்தில் உங்களை சந்திக்கிறேன். இது நான் நடித்த முழு நேர படம். ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் அடுத்த படம் கொடுக்கும் வரை நிம்மதியாக இருக்க முடியாது. அவ்வளவு டென்ஷன் இருக்கும். மன உளைச்சல் அதிகமாக இருக்கும் .

அதே மாதிரி மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்த பின்னும் கூட வேறு விதமான டென்ஷன் இருக்கும் ..ஒருவர் குறிப்பிட்ட மீட்டர் தூரத்தை இத்தனை நிமிஷத்தில் ஓடி ஒரு ரெகார்ட் பண்ணி விட்டார் என்றால் அடுத்த முறை அவர் ஓடும்போது, அதே மாதிரி அந்த கிலோமீட்டர் ஓடவில்லை எனில், ’அவரது பர்பாம்மன்ஸ் சரியில்லை’ என்று கூறிவிடுவார்கள்.

எனவே, அவர் அதே அளவு ஓட வேண்டும். இல்லை என்றால், அதற்கு அதிகாமான தூரம் ஓட வேண்டும். ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டான பிறகு நான் லால் சலாம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தேன். தற்போது, முழு நேர படமாக வேட்டையன் படத்தில் நடித்துள்ளேன். ஜெயிலர் திரைப்படத்துக்கு பின்பு அடுத்த படம் என்ன பண்ணுவது என்று நான் யோசித்தபோது நிறைய தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், நல்ல இயக்குநர்கள் இருப்பது குறைவாகிவிட்டது தற்போது கதை, திரைக்கதை இயக்கம் என எல்லாமே இயக்குநர்கள்தான் கொடுக்கிறார்கள்.

மாஸ் ஹீரோவா... நிறுவனமும் மாஸாக இருக்க வேண்டும்

ஹீரோ மட்டும் மாஸ் ஹீரோவா இருந்தால் மட்டும் போதாது.. அந்த திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனமும் மாஸாக இருக்க வேண்டும். ஜெயிலர் படத்துக்கு பின்பு நான் பிற இயக்குநர்களிடம் கதை கேட்ட பிறகு அவர்களது படத்தில் நான் நடித்துக் கொடுக்க வில்லை என்றால்.. அவர்களுக்கு வருத்தமாக இருக்கும். அதனால், தான் ஞானவேலை நான். அழைக்காமல் இருந்தேன்.

இயக்குநர் டி.ஜே.ஞானவேல்!

ஜெய்பீம் படம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இது 2 வது படம் எந்தவொரு பெரிய இயக்குநரிடம் உதவி இயக்குநராக ஞானவேல் பணிபுரியவில்லை. அவர் ஒரு பத்திரிக்கையாளராக இருந்து இவ்ளோ பெரிய படத்தை. கொடுத்திருக்கிறார், என்றால்.. இவர் மிகப்பெரிய இயக்குநர். அவர் நான் பார்க்க வேண்டிய நபர் தான் என்று யோசித்த போது எனது மகள் சௌந்தர்யா என்னை அழைத்துப்பேசினார். ”ஞானவேல் ஒரு கதை சொல்லி இருக்கிறார். அதுஉங்களுக்கு பிடித்திருந்தால், அவரிடம் பேசுங்கள்.” என்று என்னிடம் சௌந்தர்யா கூறினார்.

இதனைத் தொடர்ந்து நான் இயக்குநர் டி.ஜே.ஞானவேலை சந்தித்து பேசும்போது, ”நல்ல ஒரு கருத்துள்ள படத்தை நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். ஆனால், என்னை பற்றி உங்களுக்கு தெரியும் மக்கள் என்னிடம் இந்த மாதியான கருத்து என்று எதனையும் எதிர்பார்க்க மாட்டார்கள் .

நீங்கள் எத்தனை கோடி பணம் கொண்டு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் கூறிய கதையை கமர்ஷியலாக பண்ண முடியுமா? ” என்று கேட்டேன். ஏனென்றால் ”பிற இயக்குனர்கள் என்னை வைத்து என்னுடைய விதத்தில் தான் படம் எடுத்தார்கள். நீங்களும் அப்படி பண்ண முடியுமா?” என்று கேட்டேன். ஓகே என்றார்..

சிவாஜி கணேசன் தான்  நடித்திருக்க வேண்டும்..

வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் அமிர்தாபச்சன், நடித்த கதாபாத்திரத்திற்கு இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் நடிகர் சிவாஜி கணேசன் தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க வேண்டும். ஆனால் , அவருக்கு பதிலாக நடிகர் அமிதாப்பச்சன் நடித்துள்ளார்.

நானும் நடிகர் அமிர்தாப்பும் ஏற்கனவே மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளோம். ஞானவேல் என்னிடம் கதை சொன்ன பிறகு, தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் சொல்லிவிடுங்கள் என்று நான் இயக்குநர் ஞானவேலிடம் கூறி இருந்தேன் அப்போது சுபாஸ்கரன் ரஜினி சார், ’இது உங்க படம்’ என்றார். அதாவது, லைகா ப்ரொடக்ஷன் என்னுடையது மாதிரி என்பது என்று பதிலாளித்தார.

பகத்பாசில்

பாலு மகேந்திரா போன்று 50% இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் கதிர் பணியாற்றினார். 100% இந்த திரைப்படத்தில் எனக்கு அனிருத் வேண்டும் என்று நான் இயக்குநரிடம் கேட்டபோது, அவரோ, எனக்கு ஆயிரம் சதவீதம் புரிந்துகொண்டேன்.. அனிருத் தனக்கு தான் எனக்கு வேண்டும் என்றார்.

வில்லனாக நடிகர் ராணாவைக் கொண்டு வந்தனர். அடுத்ததாக பகத் பாசிலை மிகப்பெரிய கேரக்டரில் கொண்டு வந்தனர். ’பணம் கொடுக்கவில்லை என்றால் கூட நான் இந்த கேரக்டரில் நடிக்கிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனை ஒன்றரை மாதம் தள்ளிப் போனால் இந்த படத்தில் நான் நடிக்கிறேன்.’ என்று பகத்பாசில் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ்

அடுத்ததாக.. நான் லோகேஷ் கனகராஜன் கூலி படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சன் பிக்சர்ஸ் படம் என்ன பண்றது என யோசித்தேன். உடனே, லோகேஷ் கனகராஜிடம் இதுகுறித்து பேசிய போது, உடனே அவரும் இரண்டு மாதம் தள்ளிப்போனால் பரவாயில்லை. நாம் கூலி படத்தினை எடுக்கலாம் என்றார்.

அப்போது, நான் புரிந்து கொண்டேன், அவர் கதையை சரியாக முடிக்காமல் எனக்கு அனுமதி தருகிறார் என்று தெரிந்து விட்டது . நடிகர் ராணாவை பொறுத்தவரை ஜாலியா உட்காந்து பேசிக் கொண்டிருப்பார்.. ஆனால், நடிப்பு என்று வந்து விட்டால், வில்லன் கேரக்டரில் இருந்து ஒரு லுக் கொடுத்தால், எனக்கே பயமா இருக்கும்.

நான் ஒரு 30 வருடங்களுக்கு முன்பு கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த போது, எடுத்த உடனே, படத்தில் ஹீரோயின் யார் என்று நான் கேட்டிருப்பேன். ஆனால், இப்போது, ஹீரோயின் யார்? என்று இழுத்தபோது நடிகை மஞ்சு வாரியார் என்றார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவரை நான் பார்த்தபோது சும்மா தளதளன்னு இருந்தாங்க . பகத் பாசில் போன்று ஒரு அசாத்திய நடிகரை நான் பார்த்ததில்லை.

அடுத்ததா கிழிஞ்ச ஜீன்ஸ் பேன்ட் போட்டு, ஒரு கூலிங் கிளாஸ் போட்டு ஒரு பொண்ணு கன்னியாகுமரி சூட்டிங் ஸ்பாட்டில் நின்னாங்க. யாரு அந்த பொண்ணு என்று கேட்டபோது தான் ’இவர், திஷாரா விஜயன்’ என்றார்கள்

அமிதாப்பச்சன்

’சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தை இந்தியில் நானும் அமிதாபச்சன் முதல் முதலில் நடித்தோம். அமிதாபச்சன் என்ற மாமனிதனை பற்றி தற்போதுள்ள 2k கிட்ஸ்க்கு தெரியாது.

அமிதாபச்சன் படப்பிடிப்பு தளத்தில் காமெடி சீனில் நடித்தால் படபிடிப்பு தளமே நகைச்சுவையாக இருக்கும். சீரியஸ் என்றால், அந்த படபிடிப்பு தளமே அமைதியாக இருக்கும். அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் . அமிர்தாபச்சனின் தந்தை இந்தியில் மிகப்பெரிய எழுத்தாளர். அவரது தாயார் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி.

ராஜீவ் காந்தியும் அமிதாபச்சானும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். குடும்ப ரீதியாக அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அமிர்தாப்பச்சன் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இருந்தாலும், ஆல் இண்டியா ரேடியோவில் வாய்ஸ் கொடுத்து, அதன் பின்பு தான் மிகப்பெரிய நடிகராக வந்துள்ளார்.

அமிதாப்பச்சன் பட்ட கஷ்டம்

தற்போதுள்ள பெற்றோர்கள் தனது குழந்தைகளை பிரிட்ஜில் வைத்து வளர்ப்பது போல் வளர்க்கிறார்கள். குழந்தைகளுக்கு பணம் கொடுக்காதவர்கள் நல்ல குணத்தை கொடுங்கள். அமிதாபச்சன் ஒரு விபத்தில் சிக்கிய போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி வெளிநாடு செல்ல பயணத்தை ரத்து செய்து அவரை வந்து சந்தித்தார். அப்போதுதான் பலருக்கும் தெரிந்தது அமிதாப்பச்சன் அம்மா இந்திரா காந்தியின் நெருங்கிய தோழி என்று.

அமிதாப்பச்சன் சுவிட்சர்லாந்தில் ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கும்போது அவர் டீ போட்டு குடித்துக்கொண்டு இருந்தார். அவரைப் போன்று நானும் பெங்களூரில் ஒரு அடுக்கு மாடியில் குடியிருந்து அவரைப்போன்றே நானும் டீ போட்டு குடித்துக் கொண்டிருந்தேன். மிகப்பெரிய பணக்காரராக இருந்த அமிதாப்பச்சனின் வீடு ஒருமுறை ஏலத்திற்கு வந்து விட்டது. சினிமா துறையில் ஒருவன் எப்போது கீழே விழுவான் என்று எதிர்பார்த்து இருப்பார்கள். லேசாக சறுக்கினாலே விழுந்து விட்டான் என்று கூறி விடுவார்கள்.. அந்தளவிற்கு அமிர்தாப்பச்சன் கஷ்டப்பட்டார்.

மூன்று வருடங்களில் அவரது கடனை முடித்துவிட்டு, அவர் வீடு ஏலத்திற்கு போன அதே பகுதியில் அதனைவிட மிகப்பெரிய வீட்டை வாங்கி குடிபுகுந்தார்.. அவர்தான் அமிர்தாபச்சன்.

இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் அவர் டிவியில் பல்பொடி, ஊறுகாய் அப்பளம், ஃபேன் என அனைத்து வகையான விளம்பரத்தில் நடித்தார். சினிமாவிலும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க முடிவு எடுத்து நடித்து அந்த கடனில் இருந்து மீண்டு வந்துள்ளார். இன்றைக்கு, அவருக்கு 82 வயதாகிறது. இன்னும் அவர் ஜிம்முக்கு போகிறார்.. வாக்கிங் செல்கிறார்..படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

காசு ‘சாமி’ தான்....

அந்த சாமி, இந்த சாமி என எந்த சாமி இருந்தாலும் காசு இல்லை என்றால் அவர் ஆசாமி தான். எனவே, காசுசாமி தான் நம்மிடம் இருக்க வேண்டும். அதற்காக, ரொம்பவும் ஆட்டம் ஆடக்கூடாது. பணத்தை ஒரே இடத்தில் வைத்தால் கெட்டுப் போய்விடும். பணம் தண்ணீர் மாதிரி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்

ஒரே இடத்தில் வைத்தால் பழம் மாதிரி கெட்டுப் போய்விடும். உழைக்க வேண்டிய நேரத்தில் உழைக்க வேண்டும்.

அனிருத்

காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதனை அனிருத் கற்றுக்கொண்டுள்ளார். மேலும், எந்தவொரு படத்தையும் பார்த்தவுடனே, இந்த படம் நல்லா இருக்கு, நல்லாயில்லை என்று வெளிப்படையாக ஜோசியர் மாதிரி கூறிவிடுவார். ஜெயிலர் படத்தில் ஹூக்கும் குத்தும் பாடலில் தமன்னாவுடன் 2 சீன்ல என்னை காட்டிய மாதிரி வேட்டையன் படத்திலும், நடிகை மஞ்சுவாரியருடன் மனசில்லாயோ பாட்டிலும் ரெண்டு சீன் என்னை ஆட வைத்துள்ளனர் என்று ஆதங்கத்துடன் கூறினார்.

அனிருத் எனது குழந்தை மாதிரி.. அவர் ஒரு அடுக்குமாடி வைத்துள்ளார். அந்த வீட்டுக்குள் நான் சென்றபோது பத்தடிக்கு எனது புகைப்படமாக அவர் வைத்துள்ளார்..

வேட்டையன் படம் பூஜை போட்ட போது அக்டோபர் 10 ம் தேதியே படம் வெளியிடுவோம் என்று முடிவு செய்தது தான். அடுத்தடுத்து லைக்கா தயாரிப்பு படங்கள் நிறைய இருந்ததால், நாங்கள் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. நீங்கள் நடித்த தளபதி, புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், படத்தில் நடித்த மாதிரி நீங்கள் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று இயக்குனர் ஞானவேல் என்னிடம் கேட்டார்...

குட்டி கதை

அப்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. மிகப்பெரிய பள்ளத்தாக்கில் இறங்கி அங்கும் ஓடும் ஆற்றில் துணி துவைக்கும் ஒருவருக்கு, அவர் துவக்க கூடிய அந்த பொதியை சுமந்து செல்ல ஒரு கழுதை இருந்தது.

ஒருநாள் அந்த கழுதை திடீரென்று காணாமல் போய்விட்டது இதனால் அவர் தன் வீட்டில் இருந்தவரை கூட மறந்த நிலையில் அந்த கழுதையை தேடிச்சென்று கடைசியில் ஒரு மரத்தடியில் அமர்ந்துவிட்டார். இவர் மிகப்பெரிய ஞானி என்று அவருக்கு பல சிஷ்யர்களும் வந்து சேர்ந்தனர். அவர் எதையும் பேசமாட்டார். சைகையில் சொல்வதே நடப்பதாக நம்பினர், ஊரே அந்த ஞானியை போற்றி புகழ்ந்தனர். கடைசியில் ஒரு நாள் அந்த ஞானி முன்பு ஒரு கழுதை வந்து நின்றபோது, அதனைப் பார்த்ததும் எனது கழுதை, வந்துவிட்டது, எனது கழுதை வந்து விட்டது என்று கத்தினார்.

அப்பொழுதுதான், அந்த சிஷியர்களுக்கு விசயம் தெரிந்தது. இவர் ஒரு டோபி என்று.. உடனே, அவர்கள் இதைப்பற்றி நீங்கள். ஏதும் பேசாதீர்கள். தற்போது நீங்கள் மிகப்பெரிய ஞானி. என்று அவரை அமைதியாக உட்கார வைத்தார்கள். அதுபோல்தான்... நானும். டோபி.

முள்ளும் மலரும் படத்தில் நான் நடித்து பேசிய வசனங்கள் எல்லாம் இயக்குநர் மகேந்திரன் பேசிய டயலாக் தான் . நான் நடித்த காட்சிகள் தான் வெளியே வந்திருக்கிறது. ஒரே காட்சிக்கு 15 டேக் எடுத்துள்ளேன். ஒரு டோபி மாதிரி ஏதோ நடந்து போச்சு என்னை நல்ல ஆர்டிஸ்ட் என்று சொன்னார்கள். தளபதி மாதிரி என்னை நடிக்க சொன்னா? எப்படி, இதனால், தான் பைரவி, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை ஆகிய படங்களை பண்ணி என்னுடைய டிராக்கை மாற்றிக்கொண்டேன். சகிப்புத்தன்மையும் சாணக்கியத்தனமும் இந்த இரண்டும் ஞானவேலோடும் உள்ளது.

தமிழக மக்களுக்கு நன்றி!

எனக்கு கன்னட மொழியைத்தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. தமிழ் மொழிகூட தெரியாமல் கையில் காசு இல்லாமல் தான் ரயில் ஏறி தமிழகத்திற்கு வந்தேன். என்னை நீங்கள் வாழவைத்துள்ளீர்கள். எனவே, தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று ரஜினிகாந்த் கண் கலங்கி பேசினார்