பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளம்
இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம்| பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அட்வைஸ்!

Prakash J

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். தவிர, அதற்கான ஆதாரங்களும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரம் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. தவிர, பக்தர்களிடமும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம்

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்திருப்பதுடன், நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக்கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

ஜேபி நட்டா

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா, ”திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, “மத வழிபாட்டு தலங்களின் புனிதம் காக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கொழுப்பு கலந்ததாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. திருப்பதி ஏழுமலையானுக்கு உலகெங்கிலும் பக்தர்கள் உள்ளனர்; பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்ததாக வரும் தகவல் ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்கா| ட்ரம்ப் மனைவி எழுதிய சுயசரிதை.. அடுத்த மாதம் வெளியீடு.. தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இதற்கிடையே, திருப்பதி லட்டு தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ அமைக்க வேண்டும் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக பவன் கல்யாண், “திருப்பதி பாலாஜி பிரசாத்தில் விலங்குக் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சிக் கொழுப்பு) கலந்ததை அறிந்து நாம் அனைவரும் மிகவும் கவலையடைந்துள்ளோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது.

மேலும், இது கோயிலின் நிலப் பிரச்னைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்திய அளவில் கோயில்களில் உள்ள பிரச்னைகளை ஆராய ‘சநாதன தர்ம பாதுகாப்பு வாரியம்’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது. தேசிய அளவில் அனைத்து கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் விவாதம் நடத்த வேண்டும். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். அவர், "மதிப்புக்குரிய பவன் கல்யாண். நீங்கள் துணை முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது. இதுபற்றி தயவுசெய்து விசாரியுங்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். அதைவிடுத்து ஏன் பொதுமக்களை அச்சுறுத்தி, இந்த விஷயத்தை தேசிய அளவில் ஊதி பெரிதாக்குகிறீர்கள்? நாடு முழுவதும் போதுமான அளவில் வகுப்புவாத பிரச்னைகள் இருக்கின்றன. மத்தியில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க; ”இங்க ஆள் இல்ல பாருங்க..”|வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த ரிஷப்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!