அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தீவிர களப் பணியாற்றி வருகின்றன. முன்னதாக பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகள் I-N-D-I-A கூட்டணியை அமைத்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்குப் போட்டியாக பாஜகவும் அவ்வப்போது N-D-A கூட்டணியில் (தேசிய ஜனநாயக கூட்டணி) ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் N-D-A கூட்டணியில் பாஜகவுடன் அங்கம் வகித்து வந்த அதிமுக, கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சில நாட்களாய் மவுனம் சாதித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ‘பாஜகவுடன் அதிமுக விலகியது, ஒட்டமொத்த தொண்டர்களின் முடிவு’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் N-D-A கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் N-D-A கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று (அக்.5) அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அதிமுக உடனான கூட்டணி முறிவு குறித்து அண்ணாமலை சொன்ன பரபரப்பு கருத்து!
ஆந்திரப் பிரதேசத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டார். இதற்கிடையே, ஊழல் வழக்கில் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சிறையில் நேரில் சந்தித்து பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பவன் கல்யாண், “தெலுங்கு தேசம் வலுவான கட்சி. ஆந்திரத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த ஆட்சிக்கும் தெலுங்கு தேசம் தேவைப்படுகிறது. இன்று தெலுங்கு தேசம் இக்கட்டான சூழலில் உள்ளது. நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இந்தச் சூழலில் ஜனசேனா இளைஞர்களின் ஆதரவு தெலுங்கு தேசத்துக்கு தேவைப்படுகிறது. தெலுங்கு தேசமும், ஜனசேனாவும் இணைந்தால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மூழ்கிவிடும்” என்றார்.
ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், ஜனசேனாவும் விலகுவதாக அறிவித்துள்ளது பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன் கல்யாண் மாறி இருப்பது ஆந்திராவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இதையும் படிக்க: மீண்டும் அண்ணாமலை இல்லாமல் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்!
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து விலகி வருகின்றன. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஷிரோமணி அகாலிதளம் கட்சி அறிவித்தது. அதன்படி, கடந்த 2020 செப்டம்பர் 27 முதல் அக்கூட்டணியில் இருந்து விலகியது. 1997ஆம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் ஷிரோமணி அகாலி தளம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இக்கட்சி விலகியது, பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
அடுத்து, பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆளுங்கட்சியாக இருந்த நிலையில், பின்னர் கழட்டிவிடப்பட்டது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2022, ஆகஸ்ட் 9ஆம் தேதியுடன் அதன் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது. இதுவும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 1989ஆம் ஆண்டு முதல் கூட்டணியில் இருந்து வந்த சிவசேனாவும்-பாஜகவும், 2019ஆம் ஆண்டில் இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலால் அக்கூட்டணி அதே ஆண்டு ஜூன் மாதம் பிளவுற்றது. மகாராஷ்டிராவில் சிவசேனா விலகிச் சென்றதைச் சுதாரித்துக்கொண்ட பாஜக, பின்னர் அக்கட்சியை உடைத்து ஷிண்டே பிரிவை உடைத்து ஆட்சியில் அமர்த்தியது.
தென்னிந்தியா எப்பொழுதுமே பாஜகவுக்கு சிக்கலான ஒன்றாகவே இருந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் ஆட்சியில் இருந்த நிலையில் அதுவும் தற்போது பறிபோய்விட்டது. தென்னிந்தியாவில் அதற்கு வலுவான கூட்டணியாக இருந்து வந்தது அதிமுக. பல சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதிமுகவின் துணை பாஜகவிற்கு தேவைப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் நீண்ட உரசலைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுகவும் விலகிவிட்டது. பாஜக - அதிமுக இடையேயான வார்த்தை மோதல் போக்கு கடந்த சில தினங்களாக வலுவான நிலையில், கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி, அக்கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இந்தக் கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது என்ன நடக்கும் என பலரும் விமர்சனங்களை வைத்தபோதும் இன்றைய நிலைக்கு அதிமுக பாஜக கூட்டணி நிச்சயமாக இல்லை. நாடாளுமன்றத் தேர்தலையும் நிச்சயமாக பாஜக இல்லாமலேயே சந்திக்கும் என்பது எடப்பாடியின் கடந்த இரண்டு நாள் பேச்சு உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தில் இது அதிமுகவோடு நிச்சயமாக நின்றுபோவதில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளும் அதன் வரிசையில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலில்தான் பெரிய இடியாக பவன் கல்யாண் கட்சி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்திற்கு வந்து மிகப்பெரிய உரையை பிரதமர் மோடி ஆற்றிச் சென்ற சில தினங்களிலேயே மற்றொரு தெலுங்கு பிரதேசமான ஆந்திராவில் இருந்து அதன் கூட்டணி கட்சி விலகி இருக்கிறது.