மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இக்கட்சிக்கும் பாஜகவுக்கும் போட்டி உள்ளது. அதிலும், மூத்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பாஜக, ஆளும் கட்சிக்கு எதிராக கையில் எடுத்துள்ளது. இது, அம்மாநிலத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது விவாவத்தைத் தூண்டியுள்ளது.
பகீரதி நதி எங்களுடைய தாய் என்பதால், அதில் வீசமாட்டோம். உங்களை தரையிலேயே வீசுவோம். தரையிலேயே நாங்கள் வெட்டி எறிவோம்.நடிகர் மிதுன் சக்ரவர்த்தி
மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் 6 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை, நேற்று (அக்.27) உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, “திரிணமூல் காங்கிரஸின் பரத்பூர் எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர், ‘இந்துக்களை 2 மணி நேரத்தில் வெட்டி பகீரதி ஆற்றில் தூக்கி வீசுவோம்’ எனப் பேசியிருந்தார். இதற்கு, முதல்வர் மம்தா பானர்ஜி ஏதாவது சொல்வார் என்று நினைத்தேன். அவர் சொல்லவில்லை. அதனால் இப்போது நான் சொல்கிறேன். நாங்கள் அவர்களை வெட்டி தரையில் புதைப்போம். பகீரதி நதி எங்களுடைய தாய் என்பதால், அதில் வீசமாட்டோம். உங்களை தரையிலேயே வீசுவோம். தரையிலேயே நாங்கள் வெட்டி எறிவோம்.
நான் முதல்வர் இல்லை. ஆனால் இதைச் சொல்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் வங்காளத்தின் சிம்மாசனத்தை வெல்வதற்கு எதையும் செய்வோம். அது பாஜகவுக்குத்தான் சொந்தமாகும். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... நாங்கள் எதையும் செய்வோம். 2026 தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்வோம்” என அமைச்சர் அமித் ஷா அமர்ந்திருந்த மேடையிலேயே அவர் அவ்வாறு பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிரசாரத்தில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸின் பரத்பூர் எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர், ”முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இந்துக்கள் வெறும் 30 சதவிகிதம்தான். ஆனால் நாங்கள் (முஸ்லிம்) 70 சதவிகிதம்... நாங்கள் உங்களை பகீரதி நதியில் வெட்டி வீழ்த்துவோம். அதைச் செய்யாவிட்டால் அரசியலைவிட்டு விலகுவேன்" எனத் தெரிவித்திருந்தார். இது, அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து அவர்மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் அவர்மீது நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில்தான், அந்தப் பேச்சுக்கு தொடர்பாக மிதுன் சக்ரவர்த்தி பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து அவர், “எங்களுக்கு சண்டை போடுபவர்கள்தான் வேண்டும். பணத்திற்காக, கட்சியில் சேர்பவர்களை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் மரங்களில் இருந்து நீங்கள் ஒரு பழத்தை வெட்டினால், நாங்கள் உங்களுடைய மரங்களிலிருந்து நான்கு பழங்களை வெட்டுவோம்" என்று மேலும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
மிதுன் சக்ரவர்த்தியின் இந்தப் பேச்சுக்கு உடனே திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் பிரகாஷ் மஜும்தார், "அரசியல் தலைவராக யாரும் அவரை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கபீர் பேசிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.. ஆனால் இப்போது, அமித் ஷா முன்னிலையில், மிதுன் சக்ரவர்த்தி பேசியிருக்கிறார். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.