kishore, pm modi pt web
இந்தியா

“மோடி மற்றும் அவரது அரசுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்” - நடிகர் ‘ஆடுகளம்’ கிஷோர்

விவசாயிகள் முதலில் மோடிக்கும், அவரது அரசாங்கத்திற்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை தரப்படுவதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கடந்த 13 ஆம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்-ஹரியானா எல்லையான கனோரியில் தடுப்புகளை நோக்கி விவசாயிகள் முன்னேறி வந்தநிலையில் பல முறை கண்ணீர் புகைக்குண்டுகளை காவல்துறை வீசியது. இதில் பஞ்சாப் மாநிலம் பதின்டாவை சேர்ந்த 21 வயதான விவசாயி உப்கரண் சிங் நேற்று உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகள், காவல்துறையினர் இடையே நடந்த மோதலில், காவலர்கள் 12 பேரும், விவசாயிகள் பலரும் காயமடைந்தனர். இதனிடையே டெல்லியை முற்றுகையிடும் பேரணி 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்களின் தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் சந்தேர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போராட்ட களத்தில் காவல்துறை நடத்திய தாக்குதலில் விவசாயி உயிரிழந்துள்ளது வேதனை அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த முறை போராட்டத்தின்போது 700 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தபிறகுதான் மோடி அரசு விவசாயிகள் கோரிக்கையை ஏற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் மரணத்திற்கு பாஜக அரசு ஒருநாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆடுகளம், பொல்லாதவன், விசாரணை, ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு, ஹரிதாஸ் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்த நடிகர் கிஷோர் ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது - “நியாமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP) வழங்குவதை உறுதி செய்து ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளைகூட விட்டுவிடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை உண்டு வாழும் இந்த பக்தர்கள்கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?

விவசாயிகள் போராட்டத்தின்போது களத்தில் சாலைகள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொருபக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் தலையில் தேசவிரோதி என்ற முத்திரை உள்ளது.

விவசாயிகள் முதலில், மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குகளினால் தைரியமடைந்து, தங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது பக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.