actor govinda pt web
இந்தியா

மும்பை | கையில் இருந்து தவறி விழுந்த துப்பாக்கி; நடிகரின் காலில் பாய்ந்த குண்டு! நடந்தது என்ன?

கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறியதில், தவறுதலாக காலில் சுட்டுக்கொண்டதால் நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Angeshwar G

60 வயதான நடிகரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான கோவிந்தா, அதிகாலை 4.45 மணியளவில் கொல்கத்தா செல்வதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை அலமாரியில் வைத்தபோது, அது தவறி கீழே விழுந்து வெடித்தது. அதிலிருந்து வெளிப்பட்ட தோட்டா அவரது இடது முழங்காலுக்குக் கீழே தாக்கியது.

வலியில் துடித்த அவர் தனது மனைவிக்கும் மேலாளருக்கும் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகாலை 5.15 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பின் தற்போது அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகள் டினா நடிகருடன் மருத்துவமனையில் உள்ளார். நடிகர் நன்றாக பேசி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்த கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹூஜா, சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் மும்பைக்கு சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கியைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். நடிகர் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கோவிந்தாவின் மேலாளர் ஷஷி சின்ஹா கூறுகையில், “தோட்டா அகற்றப்பட்டுவிட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது மருத்துவமனையில் உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் கோவிந்தாவும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது ரசிகர்கள், பெற்றோர்கள் மற்றும் தனது குருவின் ஆசிர்வாதமே தன்னைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களுக்கும் உங்களது பிரார்த்தனைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகரின் குடும்பத்தினர் அறிக்கை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.