இந்தியா

திலீப்பின் சிறைவாசம் தொடர்கிறது: மீண்டும் தள்ளுபடியான ஜாமீன் மனு

திலீப்பின் சிறைவாசம் தொடர்கிறது: மீண்டும் தள்ளுபடியான ஜாமீன் மனு

webteam

நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் திலீப்பின் சிறைவாசம் தொடர்கிறது.

தமிழ், மலையாளம், கன்னடத் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை, கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கில் தொடர்புடையதாக நடிகர் திலீப், கடந்த ஜூலை 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் மனுக்கள், கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் கேரள உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் மீண்டும் திலீப் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், திலீப்பின் முதல் மனைவி மஞ்சுவாரியார், அவரது தோழி உள்ளிட்டோர் செய்த சதி என்றும் நீதிமன்றத்தில் திலீப் சார்பில் வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில் 40 பக்கங்கள் கொண்ட அறிக்கை மற்றும் ஆவணங்கள் முத்திரையிடப்பட்ட கவரில் சமர்பிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், திலீப்பின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், திலீப்புக்கு ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. திலீப்பின் காவல் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முடிகிறது.