நடிகர் தர்ஷன் புதிய தலைமுறை
இந்தியா

கர்நாடகா: “சிறை உணவு ஜீரணமாகவில்லை; வீட்டு சாப்பாடு வேண்டும்” - நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் மனு

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக முன்னணி நடிகர் தர்ஷன், தன் நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு, ரேணுகா சாமி என்பவர் ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கடந்த ஜூன் 8ம் தேதி அவரை கடத்தி கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Actor Darshan

இந்நிலையில், சிறையில் உள்ள தர்ஷன் உடல் எடை 107 கிலோவில் இருந்து ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைந்து 97 கிலோவில் உள்ளார். சிறையில் அளிக்கப்படும் உணவு, மன அழுத்தம் போன்ற காரணங்களால், அவரது எடை குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு சிறை உணவு சாப்பிட முடியவில்லை எனவும், வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்குமாறும் கோரியுள்ளார்.

தர்ஷனின் வழக்கறிஞர் தாக்கல் செய்த ரிட் மனுவில் “உடைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, படுக்கை, புத்தகங்களை எடுத்துச் செல்ல சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சிறையில் வழங்கப்படும் உணவு தர்ஷனுக்கு ஜீரணிக்கவில்லை. ஜெயில் சாப்பாடு சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. ஜெயில் உணவு தர்ஷனுக்கு பழக்கமில்லாததால் உணவு செரிமானம் ஆகாமல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் தர்ஷன்

ஜாமீனுக்கு தேவையான ஆதாரங்களை தர்ஷனின் வழக்கறிஞர் சேகரித்து வருகிறார். அதனால் தர்ஷன் மேலும் சில நாட்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வீட்டு சாப்பாட்டை அனுமதிக்க வேண்டும் என சிறைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகள் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

இதனால் வழக்கறிஞர் தரப்பில், “சிறை அதிகாரிகள் மறுப்பது சட்ட விரோதமானது, மனிதாபிமானமற்றது. இது தொடர்ந்தால், தர்ஷன் உடல் எடை மேலும் குறையலாம். எனவே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. தர்ஷனின் குடும்பத்தினரிடம் இருந்து வீட்டு சாப்பாடு பெற நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.