தர்ஷன் எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா: கொலை வழக்கு.. ரூ.15 லட்சம் பேரம் பேசிய நடிகர் தர்ஷன்.. விசாரணையில் புதிய தகவல்!

Prakash J

கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னட திரைப்பட நடிகை பவித்ரா கவுடாவிற்கு பெங்களூரைச் சேர்ந்த ரேணுகாசாமி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதோடு, சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவு செய்துள்ளார். இதனால் நடிகை பவித்ரா, சிலரின் உதவியுடன் ரேணுகாசாமியை சிக்ரதுர்காவில் இருந்து பெங்களூரு அழைத்து வந்து சரமாரியாக அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின்போது கணவர் தர்ஷனும் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைக் கண்ட அவர்கள், சடலத்தை ராஜா கால்வாய் அருகில் வீசிச் சென்றுள்ளனர். விசாரணையில் தெரியவந்த இந்த அதிர்ச்சிகர உண்மைகளை அடுத்து, சரணடைந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கூலிப்படை ஏவி கொலை செய்தது நடிகர் தர்ஷன்தான் என்பது காவல்துறைக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தர்ஷனை மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் புயலைக் கிளப்பியது. தற்போது இதன் விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சுயேட்சை வேட்பாளர் டு முதல் பெண் துணைமுதல்வர்| ஒடிசாவில் சாதித்த வழக்கறிஞர்.. யார் இந்த பிரவதி பரிதா

இதுகுறித்து அவர்கள், ”அநாகரிகமான கருத்துகளுக்காக ரேணுகாசாமிக்கு பதிலடி கொடுக்க பவித்ரா, கணவர் தர்ஷனைத் தூண்டியுள்ளார். இதையடுத்து, ரேணுகாசாமி பற்றிய தகவல்களை சேகரிக்க சித்ரதுர்காவில் உள்ள அவரது ரசிகர் மன்றத்தின் நிர்வாகியான ராகவேந்திராவை தர்ஷன் ஈடுபடுத்தியுள்ளார்.

பின்னர் கடத்தப்பட்ட ரேணுகாசாமியை தர்ஷன் பெல்ட்டால் தாக்கியுள்ளார். மேலும் தர்ஷனின் கூட்டாளிகளாக செயல்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளான ராகவேந்திரா, கார்த்திக், கேசவமூர்த்தி ஆகிய 3 பேரும் ரேணுகாசாமியை கட்டையால் அடித்துள்ளனர்.

மேலும், அவர்கள், ரேணுகாசாமியை சுவரின் மீது வீசியதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் உடலை மழை நீர் வடிகாலில் தூக்கி எறிந்துள்ளனர். ரேணுகாசாமியை கொன்று உடலை வீசியதாக போலீசாரிடம் தர்ஷனின் கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்ததால் விசாரணையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

விசாரணையின்போது, ​​குற்றம்சாட்டப்பட்டவர்கள், தர்ஷனின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும், குற்றத்தினை ஏற்றுக்கொள்வதற்காகவும், வழக்குச் செலவுகளுக்காகவும் ரூ. 15 லட்சம் தருவதாக தர்ஷன் வாக்குறுதி அளித்ததாகத் தெரியவந்துள்ளது” என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா| மாமனாரின் 300 கோடி சொத்தை அபகரிக்க 1 கோடி செலவு செய்த மருமகள்.. விசாரணையில் புது தகவல்!