விஜயசாந்தி கோப்புப் படம்
இந்தியா

நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகல்... இதுதான் காரணமா?

Prakash J

தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து சில முக்கியத் தலைவர்கள் விலகி வருகின்றனர். அந்த வகையில் நடிகை விஜயசாந்தி தனது பதவி விலகல் கடிதத்தை மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியில் அவர் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே காங்கிரஸ் தலைவர்கள் விஜயசாந்தியுடன் தொலைபேசி வாயிலாக கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாகவும், விரைவில் அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

தெலங்கானாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜகோபால் ரெட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விவேக் வெங்கடசாமி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அண்மையில் விலகினர். 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படிக்க: ஒரு கேட்சைத் தவறவிட்ட ஷமி... ஆனால் அடுத்து நடந்த ட்விஸ்ட்! உலகக்கோப்பையில் புதிய சாதனை!