அயோத்தி ராமர் கோயிலில் உள்ள குரங்குகளுக்கு, தீபாவளி நேரத்தில் உணவளிக்கும் முயற்சியில் இணைந்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இதற்காக, ரூ. 1 கோடி நன்கொடையை அளித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரியில் உ.பி-யின் அயோத்தியில் ராமர் கோயில் மிகப்பிரம்மாணடமாக திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை தினமும் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று வருகின்றனர். குரங்குகள் ராம பக்தரான ஆஞ்சநேயரின் வாகனம் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது. அப்படியிருக்கும் சூழலில், அயோத்தியில் நிறைய குரங்குகள் உள்ளதால் அவை அங்கு இன்னும் அதிக கவனிப்புடன் பராமரிக்கப்படுகின்றன. அன்றாடம் நூற்றூக்கணக்கான குரங்குகள் கூட்டமாக அங்கே சாலைகளில் இருப்பது வழக்கமாகி விட்டது.
அளவுக்கதிகமான அக்குரங்குகளுக்கு தினமும் நேரத்திற்கு உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. உணவு இல்லாததால் அவை அங்கு செல்லும் பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன. இதை கருத்தில் கொண்டு அயோத்தி கோவிலில், ஜகத்குரு ஸ்வாமி ராகவாச்சார்யா ஜி மகராஜின் வழிகாட்டுதலின் கீழ் ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை குரங்களுக்கு உணவளிக்கும் முயற்சியையும், பக்தர்களுக்கு அக்குரங்குகளால் எந்தவித சிரமமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் முயற்சியையும் எடுத்து வருகிறது.
இதில் தற்போது, பாலிவுட் நட்சத்திரமான அக்ஷய் குமாரும் இணைந்துள்ளார். இவர், அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிப்பதற்காக ரூ 1 கோடியை நன்கொடையாக அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ளார்.
உணவு எடுத்துச்செல்லப்படும் வேனில், அக்ஷய் குமார் தனது பெற்றோர் மற்றும் மாமனார் மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னா ஆகியோரின் பெயர்களை எழுதி அவர்களை நினைவுகூர்ந்து உள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், "இவ்வளவு புனிதமான இடத்தில் குரங்குகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது, உடனடியாக எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று உணர்ந்தேன்.
வேனில் என் பெற்றோர் மற்றும் என் மாமனாரின் பெயரை எழுதுவது ஒரு உணர்ச்சிகரமான முடிவு. எங்கேயோ அவர்கள் என்னைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்று நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால், வேனுக்குப் பின்னால் உண்மையான நீல நிற பஞ்சாபி பாணியில் 'அருணா, ஹரியோம் அவுர் ராஜேஷ் கன்னா தி காடி' என்று எழுதியிருப்பேன்" என்று கூறியுள்ளார். அக்ஷய் குமாரின் இந்த முயற்சியால் சுமார் 1,200 குரங்குகளுக்கு நல்ல உணவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
அக்ஷய் குமார் இதுபோன்ற நன்கொடைகள் தருவது இது முதன்முறை அல்ல.. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் அதன் புனரமைப்புக்காக ரூ .1.21 கோடி நன்கொடை அளித்தார். கோவிட் தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது, அவர் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ 25 கோடி நன்கொடை அளிப்பதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.