இந்தியா

சபரிமலை கோயிலுக்கு செல்ல கொச்சி வந்தார் திருப்தி தேசாய் !

சபரிமலை கோயிலுக்கு செல்ல கொச்சி வந்தார் திருப்தி தேசாய் !

jagadeesh

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக மும்பையில் இருந்து கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார் பெண்ணிய செயற்பாட்டாளரான திருப்தி தேசாய்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெண்கள் சிலர் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது வருகை தந்தனர். பின்பு, பக்தர்கள் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். இது தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சபரிமலை கோயில் வழக்கை 7 அமர்வு கொண்ட நீதிபதிகளுக்கு மாற்றி உத்தரவிட்டது. எனவே, சபரிமலை விவகாரத்தில் ஏற்கெனவே இருக்கும் நிலையே தொடரும் என உத்தரவிட்டது.

இதனிடையே சபரிமலை கோயிலின் நடை நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. நவம்பர் 17-ஆம் தேதியே 10 பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றனர். பின்பு, காவல்துறையினரின் அறிவுறையின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கேரள மாநில அரசும் அறிவித்திருந்தது. மேலும், நீதிமன்றத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.

இந்நிலையில் கடந்தாண்டு மும்பையில் இருந்து வந்து சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் பக்தர்கள் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டார். இப்போது இந்தாண்டும் அதே திருப்தி தேசாய், சபரிமலை கோயில் செல்வதற்காக மும்பையில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அப்போது பேட்டியளித்த அவர் " இன்று அரசியலைப்பு நாள். இந்நாளில் சபரிமலை செல்ல அனுமதி மறுக்கப்பட்டால், நிச்சயம் நீதிமன்றம் செல்வேன். அதற்கு கேரள முதல்வரும், பாதுகாப்பு தர மறுத்த டிஜிபியும் பதிலளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.