இந்தியா

திருப்தி தேசாயுடன் வந்த பிந்து மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே தாக்குதல் !

திருப்தி தேசாயுடன் வந்த பிந்து மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே தாக்குதல் !

jagadeesh

திருப்தி தேசாயுடன் சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கொச்சி வந்த கேரள பெண் பிந்து மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே அடித்து தாக்குதல் நடத்தப்பட்டது. சபரிமலை கோயிலுக்கு செல்ல தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொச்சி மாநில காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற பிந்து மீது இந்தத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்தாண்டு கேரளாவில் போராட்டங்கள் நடந்து வந்தன. அதேசமயம் அம்மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இருவரும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்ததைத் தொடர்ந்து, கோயிலை புனிதப்படுத்தும் பரிகாரப் பூஜை நடத்தப்பட்டது. தலைமை தந்திரி கண்டரூ ராஜீவரு இந்த பரிகாரப் பூஜையை நடத்தினார். இந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தந்திரியின் செயலுக்கு எதிராக அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்தாண்டு மும்பையில் இருந்து வந்த பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் திரும்பி சென்றார்.

இந்நிலையில் இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல இன்று காலை கொச்சி வந்தார் திருப்தி தேசாய். இந்தாண்டு திருப்தி தேசாயுடன் சபரிமலைக்கு செல்ல பிந்துவும் திட்டமிட்டு, அவருடன் காவல்துறை அனுமதி வாங்க கொச்சி ஆணையர் ஆலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது தன் மீது மிளகாய் பொடி ஸ்ப்ரே அடிக்கப்பட்டதாக அங்கிருந்த செய்தியாளர்களிடம் பிந்து தெரிவித்துள்ளார்.