வயநாடு முகநூல்
இந்தியா

பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து பொய் பரப்புரை மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை - வீணா ஜார்ஜ்!

வயநாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து பொய் பரப்புரை மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PT WEB

வயநாட்டில் நேற்று நடந்த தேடுதல் பணியின்போது, 2 உடல்களும், 7 உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினரை தவிர்த்து, பதிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 தன்னார்வலர்கள், 188 குழுக்களாக பிரிந்து ஆறு இடங்களில் இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆறாவது நாளாக நேற்று நடந்த மீட்புப் பணியின்போது, 2 பேரின் உடல்களும், 7 உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்ட ஒரு உடல் வடுவஞ்சால் கடாச்சிகுன்னு பகுதியில் உள்ள பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. பள்ளத்தில் இருந்த உடல், ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு வெளியே எடுத்துவரப்பட்டது. இதேபோல், சூஜிப்பாறை நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு உடலும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில்,வயநாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து பொய் பரப்புரை மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிலச்சரிவில் பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ள நிலையில், அந்த குழந்தைகளை வளர்க்க விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு தனியார் மருத்துவமனை வழங்கிவருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின.

இது பொய்யான தகவல் என்பது உறுதியான நிலையில், இதுபோன்ற பொய் பரப்புரையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு பொய் பரப்புரை மேற்கொள்வோரின் குறித்து விசாரணை நடத்தி சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் முறைப்படி புகார் அளிக்க, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.