உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பட்டியலினத்தை சேர்ந்த மூன்று மைனர் சகோதரிகள் மீது அமிலம் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஆட்டப்பட்ட மூவரும் சிறுமிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
‘அதிகாலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. நள்ளிரவு ரெண்டு மணி அளவில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது ரசாயன திரவம் வீசப்பட்டுள்ளது. அதனால் மூவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சகோதரிகளில் மூத்தவரான 17 வயது சிறுமி 35 சதவிகித தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
12 வயது சிறுமி 25 சதவிகிதமும், 8 வயது சிறுமி 5 சதவிகித பாதிப்புக்கும் ஆளாகியுள்ளனர்.
மூவருமே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுய நினைவோடு இருக்கின்றனர். அவர்கள் மீது வீசப்பட்ட ரசாயனத்தின் தன்மையை அறிந்து கொள்ள ஆய்வறிஞர்களின் உதவியை நாடியுள்ளோம்.
சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளோம். இது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். விரைந்து செயல்பட்டு இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்போம்’ என கோண்டா மாவட்ட எஸ்.பி ஷைலேஷ் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். அதில் தங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை சிறுமிகளின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூத்தவரான 17 வயது சிறுமிக்கு திருமண வரன் பார்க்கப்பட்டு வருவதாகவும் குடும்பத்தார் சொல்லியுள்ளனர்.