கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் புகார் கூறப்பட்ட பிஷப், நிர்வாகப் பொறுப் புகளில் இருந்து விலகியுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதுபற்றி அந்த கன்னியாஸ்திரிகள் கூறும்போது, ‘எங்கள் சகோதரிக்காக நாங்கள் போராடுகிறோம். தேவாலய நிர்வாகம், அரசு மற்றும் போலீஸ் துறைகள் மூலம் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நீதி கிடைப்பதற்காக, நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். பிஷப்புக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் இருந்தும் அவர் கைது செய்யப்படவில்லை’ என்றனர். இந்த விவகாரத்தில் வாடிகன் தலையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் கன்னியாஸ்திரிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. நடிகைகள் ரீமா கல்லிங் கல், பார்வதி, மஞ்சு வாரியர் உட்பட பல சினிமா துறையினரும் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் பிஷப்பிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் தேவாலய நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து பதவி விலகியுள்ளார். ஆனால் பிஷப்பாக அவர் தொடர்வார் என்று கூறப்படுகிறது. வாடிகன் நிர்வாகம் தலையிட்டதை அடுத்து அவர் பதவி விலகியதாகவும் அவர் கேரளாவில் இருந்து விரைவில் வெளியேறுவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இதை வரவேற்றுள்ள கன்னியாஸ்திரிகள், அவர் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.