இந்தியா

மங்கத் தொடங்கிய வைரத்தின் தேவை: சூரத்தில் 20,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு

மங்கத் தொடங்கிய வைரத்தின் தேவை: சூரத்தில் 20,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு

JustinDurai

வைரத்தின் தேவை குறைந்த வருவதால் சூரத்தில் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு போலவே வைரங்களின் விலையும் சமீப காலமாகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் வைரங்களை வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்துள்ளது. இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவில் வெட்டப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்களுக்கான தேவை குறைந்து வருவதால் வேலையிழப்புகள் அதிகரித்துள்ளது.

உலகில் விற்கப்படும் வைரங்களில் 80 சதவீதம் குஜராத் மாநிலம் சூரத்தில் பாலிஷ் செய்யப்பட்டவை. இப்பணிகளுக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான மதிப்புக்கு பட்டை தீட்டப்படாத வைரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சூரத்தில் மட்டும் 9 ஆயிரம் வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்டர்கள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான யூனிட்களில் 60 முதுல் 70 சதவீத பேர் மட்டுமே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சூரத் வைர சங்க செயலாளர் டாம்ஜி மவானி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ரஷ்ய அரசின் பங்களிப்போடு செயல்பட்டுவரும் பல்வேறு வைர ஏற்றுமதி நிறுவனங்கள் பொருளாதார தடையால் முடங்கியுள்ளன. உலகில் பல நாடுகளுக்கு பட்டை தீட்டப்படாத வைரங்களை இந்நிறுவனங்கள் அனுப்பி வந்த நிலையில், தற்போது ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்தியாவில் வைர தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.