2005-06ஆம் ஆண்டில் இருந்ததை விட 2015-16இல் இந்தியாவில் வயது வந்த ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வுகளை அடிப்படையாக வைத்து டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் விவரங்கள் மருத்துவ இதழ் ஒன்றில் கட்டுரையாக வெளியாகியுள்ளது. இதில் 2005-06ஆம் ஆண்டில் இருந்ததை விட 2015-16இல் இந்தியாவில் வயது வந்த ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழங்குடியின பெண்களின் சராசரி உயரம் மற்ற பெண்களை விட குறைவாக உள்ளதாக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 26 முதல் 50 வயது வரையிலான பிரிவில் பட்டியலின பெண்களின் சராசரி உயரம் 2005-06இல் 150.66 சென்டிமீட்டராக இருந்த நிலையில் 2015-16இல் 151.16 சென்டிமீட்டராக உயர்ந்து காணப்பட்டது.
இதர பிற்படுத்தப்பட்ட பெண்களின் உயரம் 151.77 சென்டிமீட்டரில் இருந்து 152.01 ஆக அதிகரித்திருந்தது. ஆனால் பழங்குடியின பெண்கள் உயரம் 151.27 சென்டி மீட்டரில் இருந்து 151.22 சென்டி மீட்டர் ஆக குறைந்திருந்தது. பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போது பணக்கார பெண்களின் சராசரி உயரம் பிற பெண்களை விட அதிகமாக இருப்பதாகவும் அக்கட்டுரை கூறுகிறது. ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் இந்த உயர மாறுபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் உயரம் குறையும் போக்கு இந்திய அளவில் சரிந்து வந்தாலும் மற்ற நாடுகளில் அதிகமாக இருப்பதாக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.