இந்தியா

முதல்ல வரும் ஏசி, பிறகு வருவார் யோகி: தியாகத்தை அவமதித்த அதிகாரிகள்

முதல்ல வரும் ஏசி, பிறகு வருவார் யோகி: தியாகத்தை அவமதித்த அதிகாரிகள்

webteam

பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்தினரை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திக்க வந்தபோது, அதிகாரிகளால் ராணுவ வீரரின் வீட்டில் போடப்பட்ட ஏசி, சோஃபா, கார்பெட் ஆகியவற்றை முதல்வர் வந்து சென்றதும் எடுத்துச் சென்ற சம்பவம் அக்குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை தலைமைக் காவலர் பிரேம் சாகரின் வீடு, உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ளது. அவர் வீட்டுக்கு அம்மாநில முதல் யோகி ஆதித்யநாத், வந்தார். முன்னதாக அந்த வீரரின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், முதல்வர் வசதிக்காக, விண்டோ ஏசி, குஷன் சோஃபா, கார்பெட், ஜன்னல் கதவுகளுக்கு கர்ட்டன்கள் ஆகியவற்றைப் போட்டுள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத், 15 முதல் 30 நிமிடங்கள் அக்குடும்பத்தினரை சந்தித்துப் பேசியுள்ளார். அவர் அந்த வீட்டை விட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே, ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர், தியோரியா மாவட்ட அதிகாரிகள்.

முதல்வரின் வருகைக்காக அந்த கிராமம் சுத்தம் செய்யப்பட்டு, குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு, திறந்துகிடந்த சாக்கடைகள் மூடப்பட்டதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். “நாங்கள் இந்த வசதிகளையெல்லாம் எதிர்பார்க்கவில்லை; ஆனால் அதிகாரிகள் அவர்களாகவே இதை செய்து, முதல்வர் வந்து சென்ற மறு நிமிடமே எடுத்துச் செல்கின்றனர். நாட்டுக்காக உயிரைக் கொடுத்துள்ளார் என் சகோதரர். எதற்காக எங்களை இப்படி சங்கடப்படுத்துகிறார்கள். நடந்த சம்பவம் முதல்வர் யோகிக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்பவில்லை” என்று மறைந்த ராணுவ வீரரின் சகோதரர், தயா சாகர் தெரிவித்துள்ளார்.