பீகாரில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்ததாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த எம்.எல்.ஏ ஆனந்த் சிங் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பீகார் மாநிலம் மோகாமா ( Mokama) தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங். சுயேச்சை எம்.எல்.ஏவான இவரது மூதாதையர் வீடு, அதே மாவட்டத்தின் லட்மா கிராமத்தில் உள்ளது. அங்கு ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
அவர் மீது, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரைக் கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்குச் சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் ஆனந்த் சிங் வெளியிட்ட வீடியோவில், தான் 3 நாட்களில் சரண் அடைவேன் எனத் தெரிவித்திருந்தார். அத்துடன் கைதுக்கு பயப்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தான் கூறியதுபோலவே, ஆனந்த் சிங், டெல்லியில் உள்ள சாகேத் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை பீகார் அழைத்துவர தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.