கன்யாஸ்திரி திட்டத்தால் சுமார் 60 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, `கன்யாஸ்த்ரி திபாஸ்’ என்ற திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் செய்த நிதி உதவி வழங்கி வருகிறார். ஏராளமான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இதன்மூலம் பயன் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம், யுனிசெஃப் அளவில் பாராட்டப்பட்டிருக்கிறது.
பெண் கல்வியை ஊக்குவிக்கவும் இளம்வயது திருமணத்தை தடுக்கவும் ‘கன்யாஸ்திரி’ திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் நாட்டில் முதல்முறையாக மேற்கு வங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று தேசிய பெண் குழந்தை நாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இன்று தேசிய பெண் குழந்தை நாள். கன்யாஸ்திரி திட்டம் பெண் குழந்தையை மேம்படுத்துவதில் புரட்சிகரமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு யுனிசெஃப் மூலம் கன்யாஸ்திரி திட்டத்தின் பொதுச் சேவைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 60 லட்சம் பெண்கள் இந்த புரட்சிகர திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு ட்விட்டரில், “இன்று சர்வதேச கல்வி தினம். 2011 முதல் மேற்கு வங்கத்தில் கல்வி உள்கட்டமைப்பு கணிசமாக முன்னேறியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில், நாங்கள் 28 புதிய பல்கலைக் கழகங்களை அமைத்துள்ளோம். அதே நேரத்தில் 50 புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.