டெல்லி செய்தியாளர்: ராஜிவ்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குனரகத்தின் சம்மனை மீண்டும் புறக்கணிக்க உள்ளார்,
மேலும் அந்த சம்மனை "சட்டவிரோதமானது" என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வருக்கு மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புவதற்குப் பதிலாக நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த சம்மன்களுக்கு இணங்காதது தொடர்பான வழக்கை கடந்த சனிக்கிழமையன்று விசாரித்த டெல்லி நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது 6வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தெரிவித்துள்ளது.
ஆனால் சம்மனுக்கு முதல்வர் ஆஜராகமாட்டார் எனவும், “அமலாக்கத்துறை சம்மன்கள் சட்ட விரோதமானது. அமலாக்கத் துறையின் சம்மன் செல்லுபடியாகும் விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு பதிலாக, நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும்” என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.