சஞ்சய் சிங் ani
இந்தியா

மழைக்காலக் கூட்டத்தொடர்: ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி இடைநீக்கம்! என்ன காரணம்?

மணிப்பூர் விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை 24) மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், அவையின் மையப்பகுதிக்கு சென்று “மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் பியூஷ் கோயல், ‘ஆம் ஆத்மி உறுப்பினரை இடைநீக்கம் செய்ய வேண்டும்’ என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

சஞ்சய் சிங்

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மீதமிருக்கும் கூட்டத் தொடர் நாட்களில் இருந்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அமளி காரணமாக அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து சஞ்சய் சிங் நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். முன்னதாக மக்களவையிலும் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்றைய நாளின் முடிவில் மீண்டும் முழுமையாக முடங்கியது நாடாளுமன்றம். இரு அவைகளும் நாளை (ஜூலை 25) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.