சஞ்சய் சிங் ட்விட்டர்
இந்தியா

புதிய மதுபானக் கொள்கை வழக்கு: 6 மாதம் திகார் சிறையில் இருந்த ஆம் ஆத்மி எம்.பிக்கு ஜாமீன்!

புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Prakash J

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு 2ஆம் எண் அறையுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இவ்வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று (ஏப்ரல் 2) உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

டெல்லி எம்.பி. சஞ்சய் சிங் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 4ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது இந்த அறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த அறைக்குப் பதில் சஞ்சய் சிங்கிற்கு 5ஆம் எண் அறை ஒதுக்கப்பட்டது.

இதையும் படிக்க: ’என் புருஷனை கொன்றால் ஸ்பாட்டிலேயே ரூ.50 ஆயிரம்’ - ஸ்டேட்டஸ் வைத்த மனைவி.. பதறியோடிய கணவர்!

கிட்டத்தட்ட 6 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் சிங், தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சய் சிங் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், “சஞ்சய் சிங் வழக்கில் பணம் எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், 6 மாதங்களாக அவரை சிறையில் வைத்துள்ளீர்கள், அவருக்கு காவல் தேவையா.. இல்லையா என்பது குறித்து உணவு இடைவெளிக்குப் பிறகு தெரிவிக்க வேண்டும்” என்று அமலாக்கத்துறை தரப்புக்கு உத்தரவிட்டனர்.

பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியவுடன், சஞ்சய் சிங் ஜாமீனுக்கு அமலாக்கத்துறை ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாகக் கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீன் கோரி சஞ்சய் சிங், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ - எதிர்க்கட்சி தீவிர பிரசாரம்.. பதிலடி கொடுத்த வங்கதேச பிரதமர்!