முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு அமைச்சர் சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டெல்லி அரசை ஆள மக்கள் அனுமதி அளித்துள்ளதால், சிறைக்குச் சென்றாலும் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க வேண்டும் என கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
ஆட்சியில் இருந்து கெஜ்ரிவாலை அகற்ற முடியாத காரணத்தால், அவரை பதவி விலக வைக்க பலவழிகளை பாரதிய ஜனதாவும் பிரதமர் மோடியும் கையாள்கின்றனர். கெஜ்ரிவால் சிறைக்கு சென்றாலும் அடுத்தடுத்து அமைச்சர்களும் செல்ல வாய்ப்புள்ளதால், சிறைக்குள் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த நேரிடலாம்” என தெரிவித்தார்.
மற்றொரு அமைச்சரான அதிஷி கூறுகையில், “சிறைக்குள் அமைச்சரவைக் கூட்டம் நடத்த நீதிமன்ற அனுமதியை நாடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது” என தெரிவித்தார்.
டெல்லி மதுபான வரிவிதிப்பு கொள்கை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது சட்டவிரோதம் எனக்கூறி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படலாம் என கருதப்படும் நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.