இந்தியா

“டெல்லியைப் போல் குஜராத் தேர்தல் முடிவுகளும் அதிர்ச்சி தரும்”.. உற்சாகத்தில் ஆம் ஆத்மி!

“டெல்லியைப் போல் குஜராத் தேர்தல் முடிவுகளும் அதிர்ச்சி தரும்”.. உற்சாகத்தில் ஆம் ஆத்மி!

PT

டெல்லி மாநகராட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளது.

250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 126 இடங்களுக்கும் மேலாக கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது அக்கட்சி. மொத்தமுள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி 134 இடங்களிலும், பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் வெறும் 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. சுயேட்சைகள் மூன்று இடங்களில் வெற்றி பெற்றார்கள். பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சி தற்போது ஆம் ஆத்மி வசம் வந்துள்ளது.

நன்றி கூறிய அரவிந்த் கெஜ்ரிவால்!

மாநகராட்சி தேர்தல் வெற்றியை அடுத்து டெல்லி மக்களுக்கு நன்றி கூறியுள்ளார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். தங்களுக்கு இந்த மாபெரும் வெற்றியை வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும். இனி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தூய்மையான மற்றும் அழகான டெல்லியை உருவாக்குவோம் எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி மாநில துணை முதல்வர் மணி சிசோடியா:

“ஆம் ஆத்மி கட்சியின் மீது நம்பிக்கை வைத்த டெல்லி மக்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்திலேயே மிகவும் எதிர்மறையான சிந்தனைகளை கொண்ட கட்சியை வீழ்த்தி இருக்கிறோம். உண்மையில் இது வெறும் வெற்றியாக மட்டுமில்லாமல் மிகப்பெரிய பொறுப்பாகவும் பார்க்கிறோம்” என மணி சிசோடியா கூறியுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் பகவத்மான்:

“15 ஆண்டு காங்கிரஸ் டெல்லி ஆட்சியையும், 15 ஆண்டு பாஜக டெல்லி மாநகராட்சி ஆட்சியையும் அரவிந்த் கெஜ்ரிவால் வேரோடு அகற்றியுள்ளார். டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை. அதற்கு மாறாக பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் மின்சாரம் தூய்மை கட்டமைப்பு ஆகியவற்றை விரும்புகிறார்கள் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றியை தொடர்ந்து குஜராத் தேர்தல் முடிவுகள் ஆச்சிரியம் அளிக்கும். குஜராத்தில் தேர்தலிலும் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி ஆம் ஆத்மி வெற்றி பெறும்” என பஞ்சாப் முதல்வர் பகவத்மான் கூறினார்.