தேசிய அரசியலில் முத்திரை பதிக்க வேண்டும் என்று கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, தங்கள் கட்சியின் அடித்தளத்தை மாநிலங்களில் வலுவாக்க, மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்தி வரும் அக்கட்சி இந்த முறை கோவா மற்றும் பஞ்சாப் மாநிலம் சட்டமன்ற தேர்தல்களில் தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறது.
இதற்காக அக்கட்சி டெல்லி பாணியிலேயே கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு மாநிலங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அந்தவகையில் டெல்லி மாடலை அடிப்படையாகக் கொண்டு கோவா மாடல் மற்றும் பஞ்சாப் மாடல் என்று இரண்டு மாநிலங்களிலும் தனித்தனியாக திட்டங்கள் செயல்படுத்தப்படும் என வெளிப்படையாகவே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இப்போதுவரை, இரண்டு மாநிலங்களிலும் இலவச மின்சாரம் என்பது பொதுவான தேர்தல் வாக்குறுதியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தமிழகம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட தேர்தல் வாக்குறுதியான ‘18 வயதுக்கு மேலான அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கப்படும்’ என்ற அறிவிப்பை இந்தமுறை வடக்கில் ஆம் ஆத்மி கட்சி கையில் எடுத்து கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அறிவித்துள்ளது.
கடந்த தேர்தலில், தலைநகர் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள முஹல்லா கிளினிக் என்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அக்கட்சிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. எனவே அதே பாணியில் பஞ்சாப் மாநிலத்தில் 16,000 கிளினிக்குகள் அமைக்கப்படும் என்றும் கோவா மாநிலத்தில் ஒவ்வொரு கிராம மற்றும் வார்டுகளிலும் அமைக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்துள்ளார். ‘ஊழலை ஒழிப்போம்’ என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படையான கொள்கை. அந்தவகையில் பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம் என்பதும் பொதுவான வாக்குறுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் கோவா மாநிலத்தில் பிரதான தொழிலாக உள்ள சுற்றுலாத்துறை மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பிரதான தொழிலாக உள்ள விவசாயத் துறை ஆகியவற்றின் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. போலவே இரண்டு மாநிலங்களிலும் தரமான கல்வி மற்றும் இலவச கல்வி ஆகியவையும் பொதுவான வாக்குறுதிகளாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பொதுவான பிரச்சினையாக இருப்பது போதைப்பொருள் விவகாரம். ஆகவே தங்கள் ஆட்சிக்கு வந்தால் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை பொருத்தவரை, ‘பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு அமைந்தவுடன் உருவாக்கப்படும்; வேலை வாய்ப்புகளைப் பார்த்து கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள், மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்புவார்கள்’ என வாக்குறுதி வழங்கியுள்ளார் அர்விந்து கேஜ்ரிவால். கோவாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி கூறியுள்ளார் அவர்.
இவை தவிர குடிநீர் சாலை வசதி போன்ற பொதுவான வாக்குறுதிகளையும் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாகவே வழங்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி அரசியலை மையமாகக் கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் இந்த தேர்தல் வாக்குறுதி வியூகங்கள் அவர்களுக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கப் போகிறது என்பதை பார்க்க வேண்டியுள்ளது.
தொடர்புடைய செய்தி: "யாருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடவில்லை" - மத்திய அரசு பிரமாணப் பத்திரம்