அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளம்
இந்தியா

ஹரியானாவில் வீழ்ச்சி.. ஜம்முவில் எழுச்சி.. 5வது மாநிலத்தில் கால்பதித்த ஆம் ஆத்மி.. காரணம் என்ன?

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியானாவில், ஆம் ஆத்மி ஓர் இடத்தைக்கூடப் பிடிக்க முடியாமல் போயிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

Prakash J

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் முடிவுற்று, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீரில் என்.சி. மற்றும் காங்கிரஸ் கூட்டணியும், ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜகவும் ஆட்சியமைக்க இருக்கின்றன. இதில் ஜம்மு - காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானா

இந்த நிலையில், I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸோடு கூட்டணி அமைக்காமல் ஹரியானா தேர்தலைச் சந்தித்தது. ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான தொகுதிகளை குறிவைத்து ஆம் ஆத்மி கட்சி களம் கண்டபோதிலும், அதுவுமே அக்கட்சிக்குச் சாதகமாக அமையவில்லை. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன்பெற்று வெளியேவந்த அரவிந்த் கெஜ்ரிவால், பெரிய அளவில் ஹரியானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். என்றாலும், சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்ற அளவுக்குக்கூட ஆம் ஆத்மி வெற்றிபெறவில்லை.

இதையும் படிக்க: “வினேஷ் போகத் எங்கு சென்றாலும்..” - தேர்தலில் வெற்றிபெற்றதை கடுமையாக விமர்சித்த பிரிஜ் பூஷன் சிங்!

தவிர, அக்கட்சியின் வாக்குச் சதவிகிதம் வெறும் 1.57 ஆக பதிவாகி இருக்கிறது. ஒருவேளை, காங்கிரஸும், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்திருந்தால்கூட, வெற்றிவாய்ப்பு மாறி வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதைப் புறந்தள்ளிய ஆம் ஆத்மி, டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியானாவில் ஓர் இடத்தைக்கூடப் பிடிக்க முடியாமல் மண்ணைக் கவ்வியிருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது.

டெல்லிக்கு அருகில் இருக்கும் இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி ஓர் இடத்தைக்கூடப் பிடிக்க முடியாததால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ஜம்மு - காஷ்மீரில், தன் கால்தடத்தை முதல்முறையாகப் பதித்துள்ளது ஆம் ஆத்மி. ஜம்முவின் தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் அபார வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கஜெய் சிங் தோல்வியடைந்தார்.

இதன்மூலம் 5வது மாநிலமாக ஜம்மு-காஷ்மீரிலும் ஆம் ஆத்மி கால் பதித்துள்ளது. ஏற்கெனவே டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அக்கட்சி ஆட்சி செய்துவரும் நிலையில், குஜராத் மற்றும் கோவாவில் அக்கட்சிக்கு எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜம்மு வேட்பாளர் வெற்றிபெற்றது குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அவருக்கும் கட்சியினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா | தொடரும் உண்ணாவிரத போராட்டம்.. 50 மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!