சுனிதா அகர்வால் ட்விட்டர்
இந்தியா

டெல்லி: சிறையில் கெஜ்ரிவால்..மனைவி சுனிதா உடன் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் திடீர் ஆலோசனை! அடுத்து என்ன?

Prakash J

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுபான கொள்கை வழக்கில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணையின்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். டெல்லி அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கைது நிகழ்வுகளுக்கு இடையே, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 3 பேருடன் தன்னையும் கைதுசெய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாஜகவில் இணைய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த கட்சியின் அழைப்பை ஏற்காததால் அடுத்த இரண்டு மாதங்களில், நான் உட்பட சௌரப் பரத்வாஜ், ராகவ் சதா மற்றும் துர்கேஷ் பதக் ஆகியோர் கைது செய்யப்படலாம்” என தெரிவித்தார். ”முதல்வர் கைது செய்யப்பட்ட போது எங்கள் கட்சி பலமாக உள்ளதால் அடுத்தக்கட்ட கைதுகளை எதிர்பார்க்கலாம்” என அதிஷி கூறினார்.

இதையும் படிக்க: ’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ - எதிர்க்கட்சி தீவிர பிரசாரம்.. பதிலடி கொடுத்த வங்கதேச பிரதமர்!

இந்த பரபரப்புகளுக்கு இடையே டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 55 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். சுனிதா கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்பார் என கருத்துகள் பரவிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த அக்கட்சி நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துதான் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தனர். அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், முதலமைச்சராக அவரே தொடருவார் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.

ஒருபுறம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக டெல்லி அரசியல் களம், இந்திய அளவில் உற்று நோக்கப்படுகிறது.

இதையும் படிக்க: ’நெதன்யாகு பதவி விலகணும்’- இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஏன் தெரியுமா?