ஆம்ஆத்மி கட்சி புதிய தலைமுறை
இந்தியா

அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் ஆம் ஆத்மி! மத்திய இந்தியாவில் களநிலவரம் என்ன?

PT WEB

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்தது. காங்கிரஸ் தவிர்த்த மற்ற கட்சிகளும் ஆட்சி செய்திருக்கின்றன. ஆனால், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு வந்தபிறகு, சித்தாந்த ரீதியிலான எதிரியை சந்தித்தது காங்கிரஸ்.

பாஜக - காங்கிரஸ்

2014ஆம் ஆண்டில் வீசிய மோடி அலையில் மீண்டும் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மீண்டும் ஆட்சியை பிடிக்கவே I.N.D.I.A. கூட்டணி அமைத்து போராடி வருகிறது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம்ஆத்மி கட்சி குறுகிய காலத்தில் பெறும் வளர்ச்சி பெற்ற ஒரு வலுவான அமைப்பாக உள்ளது.

தேசப்பற்று, ஊழல் எதிர்ப்பு நிலைபாடு, மதச் சார்பின்மை பேசும் அதேநேரம், இந்துக்களை கவரும் விதமாக ஆலயங்களில் வழிபாடு, திறமையான அரசாட்சி, விலையில்லா பொருட்கள் மற்றும் சேவைகளை அளித்தல் என வலதுசாரி மற்றும் இடதுசாரி கோட்பாடுகளை ஒருங்கிணைத்து மக்களை கவரும் முயற்சியில் ஆம்ஆத்மி, தன் தோழர்களையும், எதிரிகளையும் ஒரே நேரத்தில் சாய்த்து வருகிறது.

Arvind Kejriwal

ஒருபக்கம் பகத் சிங்கையும், மறுபக்கம் அம்பேத்கரின் புகழை கொண்டாடுவதும் பன்முகம் வாய்ந்த அரசியல் நிலைப்பாடுகளை ஆம்ஆத்மி வைத்திருக்கிறது. இதனால், தோழமைக் கட்சியான காங்கிரஸ்க்கும், சிந்தாந்த எதிரியான பாஜகவுக்கும் சிம்மசொப்பமான உருவாகி உள்ளது ஆம் ஆத்மி கட்சி.

உதாரணமாக, தலைநகர் டெல்லியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயம் சென்று வழிபாடு நடத்திய கெஜ்ரிவால், "அனுமான் சாலிசா" பாராயணம் செய்தது, இந்துத்துவா பேசும் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளது.

பெரும்பான்மை இந்து சமுதாயத்திற்கு எதிரானவன் அல்ல என கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், சீக்கியர் வழிபடும் குருத்வாரா சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால்தான் பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று சக்திகளையும் ஆம் ஆத்மி கட்சி ஒருசேர வீழ்த்தியுள்ளது. டெல்லியிலும் இஸ்லாமியர் மனங்களை வென்று, எம். எல்.ஏக்களை பெற்றுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் பன்முக நிலைப்பாடுகளால், வட இந்தியாவில் பிற அரசியல் கட்சிகளுக்கு வலுவான போட்டியாளராக ஆம்ஆத்மி வேரூன்றி உள்ளது. கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக, ஆம்ஆத்மி வலுப்பெற வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் முயற்சி, தேர்தல் முடிவில் வெளிப்படும் என்பதே அரசியல் வல்லுணர்களின் கருத்தாக உள்ளது.