ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் pt web
இந்தியா

ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி..

PT WEB

90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 12ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த சூழலில், ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக, காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகின. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், அக்கட்சி எம்பியான ராகவ் சதா உள்ளிட்டோர், காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவர்த்தை நடத்தினர். ஆம் ஆத்மி 10 தொகுதிகளை கேட்ட நிலையில், 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை, குறிப்பாக ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது சரியாக இருக்கும் என கருதினாலும், ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி தேவையில்லை என கருதுகின்றனர். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

அதேநேரம், டெல்லி எல்லையில் உள்ள குருகிராம் மற்றும் பரிதாபாத் போன்ற பகுதிகளில் தங்களுக்கு ஆதரவு அதிகம் உள்ளதாக கருதும் ஆம் ஆத்மி, நகர்ப்புற பகுதிகளில் உள்ள 20 தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. இந்த கோரிக்கையை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நிராகரித்துவிட்டனர்.

கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்ததை குறிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சி 20 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ரோதக், சோனா, பல்லப்கர், சமல்கா உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விரைவிலேயே மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் சுஷில் குப்தா, ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் தாங்கள் போட்டியிடுவோம் என்றும், ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி வலுவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி, பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டது நினைவு கூறத்தக்கது.