இந்தியா

சகோதரியின் மறைவுக்கு அழுவதா..? ஆதாரை தேடுவதா..? கண்கலங்க வைத்த ட்விட்டர் பதிவு

Rasus

தனது சகோதரியின் இறப்பு சான்றிதழை பெறக் கூட மருத்துவமனை நிர்வாகம் ஆதாரை நிர்பந்தப்படுத்தி கேட்டதால் அதிருப்தி அடைந்த பெண் ஒருவர் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஆதார் அதிகாரிகள் அப்பெண்ணிடம் இவ்விவகாரத்திற்கு மன்னிப்பு தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது, மானியங்கள் பெறுதல் போன்ற முக்கியமான விஷயங்களில் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பல இடங்களில் ஆதாரை கட்டாயப்படுத்தி கேட்பதால் சிரமம் அடைவதாக பலர் புகார் தெரிவிக்கின்றனர். அப்படித்தான் ஜனனி என்ற பெண் ஆதார் நிர்பந்தத்தால் தனக்கு ஏற்பட்ட அதிருப்பதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “ ஆதாரையோ அல்லது இந்த அரசாங்கத்தையோ என் வாழ்க்கையில் இந்த அளவிற்கு நான் வெறுத்ததே கிடையாது. எனது சகோதரியின் இறப்பு சான்றிதழை பெற மருத்துவமனையில் அதற்கான விவரங்களை பதிவிட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் அங்குவந்த செவிலியர், என்னை ஆறுதல்படுத்தியதோடு என் சசோதரியின் அடையாளத்திற்காக ஆதார் கார்டை கேட்டார்.

ஆனால் நானோ, என்னிடம் என் சசோதரியின் லைசென்ஸ் இருப்பதாக கூறினேன். ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆதார் அட்டைதான் வேண்டும் எனக் கூறினர். எனது சகோதரியின் இறப்பு என்பது திடீரென எதிர்பாராதவிதமாக நடந்த ஒன்று. என் அம்மாவுக்கும் கூட, என் சகோதரியின் ஆதார் அட்டைகள் உள்ளிட்ட விவரங்கள் எங்கிருக்கின்றன என்பது தெரியாது. மருத்துவமனை நிர்வாகமோ அல்லது தகனம் செய்யும் இடத்தில் உள்ள நபர்களோ வேறு எந்த அடையாள அட்டைகளையும் வாங்குவதில்லை. அவளின் ஆதாரை கண்டுபிடிப்பது, எங்களுக்கு ஒரு பெரிய போராட்டமாகவே இருந்தது. கடைசியாக உங்களிடம் ஆதார் இல்லை என்றால்.. இறப்பு சான்றிதழ் கூட கிடைக்காது. இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஆகஸ்ட் 21-ஆம் தேதி மீண்டும் ஒருமுறை இழந்துவிட்டேன். எனது சகோதரியின் மறைவால் ஏற்பட்ட வலியை கையாள்வதை விட ஆதாரை கண்டுபிடிப்பதே மிகப்பெரிய போராட்டமாக இருந்தது’’ என உணச்சிப்பூர்வமாக பதிவிட்டிருந்தார். ஜனனியின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் ஜனனி இன்று மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில், “ ஆதார் அதிகாரிகள் என்னை அணுகியதுடன் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பும் கேட்டனர். அனைத்து மருத்துவமனைகள் மற்றும் தகனங்கள் செய்யும் இடத்தில் ஆதாரை நிர்பந்தமாக கேட்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.