இந்தியா

செல் நம்பர், வங்கிக் கணக்கிற்கு ஆதார் கட்டாயமில்லை - அமைச்சரவை ஒப்புதல்

செல் நம்பர், வங்கிக் கணக்கிற்கு ஆதார் கட்டாயமில்லை - அமைச்சரவை ஒப்புதல்

webteam

செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றிற்கு ஆதார் கட்டாயமில்லை என்ற சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆதார் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்தது. மிக முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் குழந்தைகளுக்கு ஆதாரம் கட்டாயம் எனவும், ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பின் படி, கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.

* வங்கிக் கணக்குகள் திறக்க ஆதார் அட்டை அவசியம் இல்லை

* வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை

* மொபைல் எண்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் இல்லை.

* சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும் ஆதார் கட்டாய தேவை கிடையாது

* பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அவசியம் இல்லை

* தனியார் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது

* ஆதார் இல்லை என்பதற்காக தனி நபரின் உரிமைகள் மறுக்கபடக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச்சட்டம் உள்ளிட்டவற்றில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த திருத்தங்களுக்கு இன்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்யவும், பணப்பரிமாற்ற செயலிகளில் கே.ஒய்.சி ஒப்புதல் பெறவும் ஆதார் கட்டாயமாக இருந்து வந்தது. ஆனால் இனி அந்த நடைமுறை இருக்காது.