இந்தியா

ஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்

webteam

ஆதார் எண் இல்லாமல், பழைய நடைமுறைப்படியே வாடிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்பதால், சுமார் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களை பெற ஆதார் அவசியம் என்றும் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அத்தோடு, எந்தெந்த விவகாரங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது. வங்கிக் கணக்குகள் துவங்க,  சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. அதே போல் சிம் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் தகவல்களை பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த நிலையில், ஏற்கனவே ஆதாரை அடையாளமாக கொண்டு சிம் கார்டு வாங்கிய வாடிக்கையாளர்களிடம் வாக்காளர் அட்டை உள்ளிட்ட வேறு அடையாள அட்டைகளை கொண்டு தகவல்களை உறுதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரிய அடையாள ஆவணங்களை அளிக்காத செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பும் உள்ளது.

எனவே வாடிக்கையாளர்களுக்கு சிக்கல் ஏற்படாத வகையில் இந்த நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து , செல்போன் இணைப்பு நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனையடுத்து ஆதாரை அடையாள ஆவணமாக கொண்டு சிம் கார்டு வாங்கியவர்கள் விரைவில் வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பேன் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காட்டி தங்களின் தகவல்களை உறுதிப்படுத்த வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.