மத்தியப் பிரதேசத்தில் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன 18 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ஆதார் மூலம் மீண்டும் பெற்றோருடன் சேர்ந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 2011-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் ஒருவன் தனியாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த போலீசார் அவரை ஒரு காப்பகத்தில் சேர்த்திருக்கின்றனர். காப்பகத்தில் சமார்த் டாம்லே என்பவரின் பாதுகாப்பில் இருந்த சிறுவனுக்கு சரியாக பேசமுடியாததால் 'அம்மா, அம்மா' என்ற வார்த்தையை மட்டும் கூறியிருக்கிறான். இதனால் சமார்த் அவருக்கு அமான் என்ற பெயரிட்டு அழைத்திருக்கிறார். 2015-ஆம் ஆண்டு காப்பகம் மூடப்பட்டு விட்டதால் சமார்த் அவரை தனது வீட்டிற்கே அழைத்துச் சென்று தனது குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்திருக்கிறார். மேலும் அவரை அருகிலிருந்த பள்ளியிலும் சேர்த்திருக்கிறார். 18 வயதான அமான் தற்போது 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் அவருடைய ஆதார் அட்டை விவரங்கள் கேட்கப்படவே சமார்த், அவருக்கு ஆதார் அட்டை பெறுவதற்காக சென்றிருக்கிறார். ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் சமார்த், நாக்பூர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு பதிவுசெய்ய முயன்றிருக்கிறார். ஆனால் அமானின் ரேகை மற்றும் அடையாளங்கள் ஏற்கெனவே முகமது அமர் என்ற பெயரில் பதிவாகி இருப்பது அங்கு தெரியவந்திருக்கிறது.
2011-ஆம் ஆண்டே ஆதார் அட்டை பெற்றிருந்ததும் தெரியவந்திருக்கிறது. மேலும், அமான் நாக்பூரை சேர்ந்த முகமது அமீர் என்பதும் தெரியவந்திருக்கிறது. அதிலிருந்த தொலைபேசி மற்றும் விவரங்களை வைத்து தொடர்புகொண்டு அமானை ஜூன் 30ஆம் தேதி தனது பெற்றோருடன் சேர்த்திருக்கிறார் சமார்த்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமானை பிரிவது தனக்கு கடினமானதாக இருந்தாலும், அவரை சொந்த பெற்றோருடன் சேர்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் எப்போது வேண்டுமானாலும் அமானை வந்து பார்க்க அவருடைய பெற்றோர் அனுமதி அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.