கர்நாடக மாநிலம், தாவணகெரேயைச் சேர்ந்தவர் பிரசாந்த், [35]. இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மாண்டியா அருகே உள்ள நரஹள்ளி பகுதியைச் சேர்ந்த சினேகா[30] என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தங்களுடைய செல்போன் நம்பரைப் பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பிரசாந்திடம், சினேகா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தாய் வீட்டிற்குச் சென்று விட்டு வருவதாகக் கூறி விட்டுச் சென்றுள்ளார். தாய் வீட்டிற்குச் சென்று நீண்ட நாட்கள் கடந்தும் வீடு திரும்பாததால் சினேகாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். செல்போன் நம்பர் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிநேகாவைத் தேடி வந்தனர்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருமணக் கோலத்தில் சிநேகாவும்,மற்றொரு இளைஞரும் சேர்ந்து இருப்பது போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரசாந்த் பார்த்தார்.
இதுகுறித்து சிநேகாவின் உறவினர்களிடம் விசாரித்த போது, சிநேகாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனதும், தற்போது மீண்டும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
மேலும் முதல் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த சினேகா, தனக்குத் திருமணம் ஆகவில்லை எனக் கூறி,பிரசாந்த் உட்பட மூன்று பேரைத் திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீசார் சிநேகாவை வலைவீசித் தேடி வருகின்றனர்.