இந்தியா

செய்யும் தொழிலே தெய்வம்: தூய்மைப் பணியாளரின் வைரல் புகைப்படம்.!

webteam

இது விழாக்களின் காலம். நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தீபாவளி வரையில் ஊரெல்லாம் விழாக்கோலம்தான். அதிலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆயுத பூஜை கொண்டாட்டமே தனிதான்.

அப்படித்தான் ஒரு தூய்மைப் பணியாளர் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படம் இணையவெளியில் வைரலாகியுள்ளது. அந்தப் படத்தில் அவர் அமைதியாக அமர்ந்தபடி குப்பைத்தொட்டிக்கும் துடைப்பத்துக்கும் பூவிட்டு பொட்டிட்டு வணங்குகிறார்.

மனிதர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பொருட்கள்தான் வணங்கப்படக்கூடிய ஆயுதமாக இருக்கின்றன. இந்த மனிதருக்கு செய்யும் தொழிலே தெய்வமாகியுள்ளது. இந்தப் புகைப்படம் அனைவராலும் சமூக வலைதளங்களில் உற்சாகத்துடன் பகிரப்பட்டுவருகிறது.

கொரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு இணையாக தூய்மை பணியாளர்களும் தங்களது சேவையை செய்து வருகின்றனர். அப்படியானால் மருத்துவ உபகரணங்கள் போல தூய்மை பணிக்கான பொருட்களும் மதிப்புக்கு உரியவை தான் என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.