ஆடை அழுக்காக இருந்தால் மெட்ரோ ரயிலில் விவசாயிக்கு அனுமதி மறுப்பு puthiya thalaimurai
இந்தியா

கர்நாடகா | மெட்ரோ ரயிலில் விவசாயிக்கு அனுமதி மறுப்பு; கொதித்தெழுந்த பயணிகள் - வைரலான வீடியோ!

“ஆடை அழுக்காக இருந்தால் அனுமதிக்க மாட்டீர்களா?” விவசாயிக்கு ஆதரவாக களமிறங்கிய பயணிகள்.. மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை! என்ன நடந்தது? முழு விவரத்தைப் பார்க்கலாம்

விமல் ராஜ்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது வெடிபொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.

ஆடை அழுக்காக இருந்தால் மெட்ரோ ரயிலில் விவசாயிக்கு அனுமதி மறுப்பு

இதுகுறித்து சோதனை செய்த பிறகே அனைத்து பயணிகளும் அனுமதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், விவசாயி ஒருவர் தலையில் துணி மூட்டையுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யச் சென்றுள்ளார். 

அப்போது, சோதனை செய்யும் இடத்தில் இருந்த அதிகாரிகள், விவசாயி போட்டிருந்த ஆடை அழுக்காக  இருப்பதாகக்  கூறி, மெட்ரோவில் பயணம் செய்ய அவருக்கு அனுமதி மறுத்தனர். இதைப்பார்த்த சக பயணிகள், “பொது போக்குவரத்து என்பது அனைவரும் பயன்படுத்தக்கூடியது. அனைவருக்கும் சமமானது. அதிலும் நாட்டின் முதுகெலும்பாகத் திகழக்கூடிய விவசாயிக்கு அழுக்கு உடையைக் காரணம் காட்டி, அனுமதி மறுப்பீர்களா? அழுக்கு உடையில் இருந்தால் அனுமதிக்கக்கூடாது என எங்கே இருக்கிறது” எனக் கேள்வி எழுப்பினர். 

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், விவசாயி மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, இந்த சம்பவத்தை சக பயணிகள் சிலர், தங்களது செல்போனில்  வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், வீடியோ வைரலானது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்பு பொறுப்பாளரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும், மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.