மணிப்பூர் கலவரம் PTI
இந்தியா

EXCLUSIVE: மணிப்பூரில் வன்முறை எல்லா இடங்களிலும் தீயாய் பரவ இந்த சம்பவம்தான் காரணமா?- பகீர் பின்னணி!

PT WEB

இரு சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் வன்முறை வெடித்து வருகிறது. இதில் இதுவரை 142 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 5,000 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும் அம்மாநில அரசே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்றாலும், மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரு சமூகத்தினரிடையே வெடித்து வரும் மோதலுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில், ஆங்கிலோ-குக்கி நினைவு வளைவுகளை மெய்தி இனக்குழுவினர் அழித்ததன் விளைவாகவே மாநிலம் முழுவதும் வன்முறைகள் பரவியதாகக்கூறப்படுகிறது.

manipur violence

சின்-குக்கி-ஜோ என அழைக்கப்படும் குக்கி பழங்குடியின மக்கள், இமயமலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லூசாய் மலைப்பரப்பில் 10 நூற்றாண்டுகளாக வசித்து வருகின்றனர். குக்கி என பொதுப்பெயரால் அழைக்கப்பட்டாலும், ரால்ட், பைட்டே, தோடவ், ஹமர் என 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடி கிளை இனங்களின் தொகுப்பாகவே குக்கி உள்ளது. இவர்கள் மணிப்பூர் மட்டுமின்றி மியான்மர், மிஸோரம், திரிபுரா, வங்கதேசத்திலும் வசித்து வருகின்றனர்.

மணிப்பூரில் மொத்தமாக 34க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் வசிக்கும் நிலையில், அதில் குக்கி மற்றும் நாகா பழங்குடியினர் மட்டுமே அதிக மக்கள் தொகையில் வசிக்கும் மலைவாசிகள் ஆவர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் இறுதி வாரத்தில் மணிப்பூர் உயர் நீதிமன்றம் மெய்தி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது குறித்து கேள்வி எழுப்பியதன் தொடர்ச்சியாக, பல்வேறு நடவடிக்கைகளை மணிப்பூர் அரசு முன்னெடுத்தது. கடந்த மே மாதம் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்பாலில் குக்கி மற்றும் நாகா இன மக்கள் பேரணி நடத்தினர். அப்போது சில சமூக விரோதிகள் அரங்கேற்றிய வன்முறைகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது.

மணிப்பூர் கலவரம்

1917இல் ஆங்கிலேயர்களை எதிர்த்து குக்கி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பின், குக்கி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு இடையே 3 ஆண்டுகாலம் போர் நடைபெற்றது. 1917இல் ஆங்கிலேயர்கள் மற்றும் குக்கி மக்களுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் நினைவாக மணிப்பூரில் உள்ள அனைத்து குக்கி வசிப்பிடங்கள், கிராமங்கள், நகரங்களில் ஆங்கிலோ-குக்கி நினைவு வளைவுகள், ஸ்தூபிகள், நினைவிடங்கள் ஆகியன அடையாளமாக நிறுவப்பட்டன.

மே 3ஆம் தேதி வன்முறைக்குப் பிறகு இந்த நினைவிடங்களை மெய்தி மக்கள் தீயிட்டுக் கொளுத்தி சேதப்படுத்தியதால், பல இடங்களுக்கும் வன்முறைகள் பரவின. மேலும், குக்கி இன மக்கள் தங்கள் அடையாளங்களை அழித்த மெய்தி மக்கள் மீது கோபம் கொண்டு தங்களுக்கு அருகே வசிக்கும் அப்பாவி மெய்தி மக்களை அச்சுறுத்த தொடங்கினர். இதன் விளைவாக தற்போது மாநிலம் முழுவதும் வன்முறைகள் பரவி அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது.

- ந.பால வெற்றிவேல்