உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவர், டி.ஒய்.சந்திரசூட். இவருடைய இல்லத்தில், நேற்று (செப்.11) விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. டெல்லியில் உள்ள நீதிபதியின் இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை டி.ஒய்.சந்திரசூட் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். பின்னர், அவர்கள் வீட்டில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, விநாயகருக்கு ஆரத்தி காட்டினார். இந்த வீடியோவை பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், ’’கடவுள் விநாயகர், நாம் அனைவரையும் மகிழ்ச்சி, வளம் மற்றும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆசிர்வதிப்பாராக” எனப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், பிரதமர் மோடியுடன் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞரும் SCBA தலைவருமான கபில் சிபல், “தற்போதைய தலைமை நீதிபதி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தனிப்பட்ட நேர்மை மிகுந்த மனிதர் என்பதை தயக்கமின்றிச் சொல்ல முடியும். அதேநேரத்தில், நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தனிப்பட்ட நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தக் கூடாது. இது விளம்பரப்படுத்தப்பட்டது என்பது தலைமை நீதிபதிக்கு தெரியாமல் இருக்கலாம். அது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ”குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்குள் மத்திய அரசு செயல்படுவதை உறுதி செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்களின் இந்த செயலானது நீதித்துறைக்கு மிக மோசமான சமிக்ஞையை அனுப்பியிருக்கிறது. அதனால்தான் நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞரான இந்திரா ஜெய்சிங், "நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பதில் இந்திய தலைமை நீதிபதி சமரசம் செய்துள்ளார்" எனத் தெரிவித்திருந்தார்.
அதுபோல் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ”அரசியலமைப்பைக் காக்க வேண்டியவர்கள், அரசியல்வாதிகளைச் சந்தித்தால், அது மக்கள் மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தும். அதாவது, மகாராஷ்டிர வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எதிர்தரப்பில் பிரதமர் மோடி இருப்பதால் எங்களுக்கு நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.
எனவே இந்த வழக்கிலிருந்து சந்திரசூட் விலகிவிட வேண்டும். மகாராஷ்டிரத்தில் நடக்கும் சட்டவிரோத ஆட்சிக்கு பிரதமர் மோடி முழு ஆதரவையும் கொடுத்துள்ளார். எனவே, பிரதமர் மோடியுடனான தொடர்பை சந்திரசூட் நேற்று வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார். இதனால் மகாராஷ்டிர மக்களிடையே ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா, ”கணபதி பூஜையில் கலந்துகொள்வது ஒருவரது தனிப்பட்ட விஷயம் என்றாலும், இது ஒரு தவறான தகவலை மக்களுக்கு அனுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
என்றாலும், ”இந்த நிகழ்வில் எந்த குற்றமும் இல்லை என்றும், அரசியல்வாதிகளும் நீதிபதிகளும் ஏற்கெனவே இதுபோன்று பல நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்றிருக்கிறார்கள், ஒரே மேடையில் இடம்பெற்றிருக்கிறார்கள்” எனப் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஸத் பூனாவாலா, ”2009ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அளித்த இஃப்தார் விருந்தில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பங்கேற்றார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கணபதி பூஜையில் பங்கேற்பது ஒன்றும் குற்றமல்ல, பல நிகழ்வுகளில் நீதித் துறையினரும் அரசியல்வாதிகளும் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர். ஆச்சரியமாக, நிகழ்ச்சிகள், திருமணம், பொது நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். ஆனால், பிரதமர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றால் சந்தேகம் எழுகிறது என்று விமர்சிக்கிறார்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், நடப்பு ஆண்டின் ஜனவரி இறுதியில் நடைபெற்ற உச்ச நீதிமன்றத்தின் வைர விழா நிகழ்வில் இருவரும் பங்கேற்ற படங்களையும் பாஜகவினர் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்றொரு பாஜக தலைவர் பி.எல்.சந்தோஷ், “அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பதில் ஆச்சரியமில்லை. கடந்த பிப்ரவரி மாதம், தலைமை நீதிபதி சந்திரசூட், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது பிரதமர் மோடி நலம் விசாரித்தார்” எனக் கூறியுள்ளார்.
"தங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும்போது, எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை பாராட்டுகின்றன. ஆனால் விஷயங்கள் தங்கள் வழியில் செல்லாதபோது, அவர்கள் நீதித்துறை சமரசம் செய்யப்படுவதாக கூறுகிறார்கள். இது தலைமை நீதிபதியின் நம்பகத்தன்மையின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நீதித்துறை எவ்வாறு உணரப்படுகிறது என்பதையும் இது சேதப்படுத்துகிறது” என ஏக்நாத் ஷிண்டே அணியின் மாநிலங்களவை எம்பி மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உத்தரவுகள் ஒவ்வொரு முறையும் மத்திய பாஜக அரசுக்கு பாதகமான தீர்ப்புகளை வழங்கியது. நடப்பு ஆண்டு பிப்ரவரியில்கூட, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, மோடி அரசாங்கத்தின் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்யும் ஒரேநிதி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) அவற்றை வழங்குவதை நிறுத்தவும் உத்தரவிட்டது. இது, மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதுதவிர, தீர்ப்புகள் மட்டுமின்றி தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியமும், மோடி அரசும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகவும் முரண்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.