இந்தியா

எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள் பிரதமர் மோடி கடும் கண்டனம்

எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள் பிரதமர் மோடி கடும் கண்டனம்

webteam

காஷ்மீர் தாக்குதல் மூலம் எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். இதற்கு ஈடாக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என பிரதமர் மோடி கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் ‌2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் இறந்துள்ளதாக சி.ஆர்.பி.எப் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்திய மக்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என  சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை விடக்கூடாது, இந்திய ராணுவம் களத்தில் இறங்க வேண்டும் எனக் கண்டனக் குரல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கும் இரங்கல்கள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். டெல்லி வாரணாசி இடையேயான வந்தேபாத் விரைவு ரயில் தொடங்க விழாவில் பேசிய பிரதமர் மோடி தீவிரவாத இயக்கத்தை கடுமையாக சாடினார். அதில் பேசிய அவர், எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். இதற்கு ஈடாக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும். 

இந்த செயலுக்கு உரிய தண்டனை கண்டிப்பாக கொடுக்கப்படும். பல கனவுகளோடு இருந்த, தாக்குதலில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களின் கனவுகளை கலைய விட மாட்டோம். இந்த தாக்குதலுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து நிற்கிறது. தாக்குதலால் இந்தியா அச்சத்தில் உறைந்துவிடாது. புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.