உதயநிதி ஸ்டாலின், மோடி ட்விட்டர்
இந்தியா

காணாமல் போன மணிப்பூர்- சிஏஜி விவகாரம்; முன்னிலைக்கு வந்த சனாதனம்-பாரத் சர்ச்சை.. மாறும் விவாதங்கள்!

மணிப்பூர் - சிஏஜி, சனாதனம் - பாரத் ஆகிய பற்றிய செய்திகள் எதிர்க்கட்சிகள் முதல் மீடியாக்கள் வரை தீப்பொறியாய்ப் பறக்கத் தொடங்கின.

Prakash J

தொடுக்கப்படும் விமர்சனக் கணைகள்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சம்பவங்களோ, பதிவுகளோ உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சமீபகாலமாக ’சனாதனம்’ மற்றும் ’பாரத்’ பற்றிய கருத்துகள், சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக இருந்து வருகின்றன. ஆனால், சில வாரங்களுக்கு முன்பு மிக முக்கியமான பிரச்னை நாடு முழுவதும் பேசப்பட்டு வந்தது. அதுதான் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள். நூற்றுக்கணக்கான மக்களை பலிகொண்ட அந்தவிவகாரம் இன்னும் நீர் பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. ஆனால், அந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் யாரும் பெரிதாக பேசுவதில்லை. இந்த விவகாரம் எப்படி மடைமாறியது. விரிவாக பார்க்கலாம்..

சனாதனம் குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்!

சனாதனம் குறித்து பேசியதற்காக, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்’ எனப் பேசியிருந்தார். இதற்குத்தான் நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வழக்குகளும் பாய்ந்துள்ளன. குறிப்பாக, I-N-D-I-A கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளே, சனாதனத்தை ஆதரித்து உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மோதிக்கொண்ட ’I-N-D-I-A’ - ’பாரத்’ பற்றிய பெயர்கள்!

இப்படி, சனாதனம் பற்றிய கருத்துகளும், எதிர்ப்புகளும் நாடு முழுதும் வெடித்துக் கொண்டிருந்தபோது, மறுபுறம் ’பாரத்’ பற்றிய செய்திகள் வைரலாகத் தொடங்கின. பாஜகவுக்கு எதிரான கூட்டணிக் கட்சிகள், I-N-D-I-A எனப் பெயர் வைத்து, புதிய கூட்டணியைத் தொடங்கியதுடன், மேலும் அக்கட்சியை விமர்சிக்கத் தொடங்கின. அதுமுதல் ’I-N-D-I-A’ மற்றும் ’பாரத்’ பற்றிய பெயர்கள் பெரிய அளவில் மோதிக்கொள்ள ஆரம்பித்தன. ’இந்தியா’வைப் (நாடு) பற்றி எதிர்க்கட்சிகளும், ‘பாரத்’ பற்றி பாஜகவினரும் இதில் நேரடியாக மோதிக்கொண்டனர். இன்னும் சிலரோ, ’இந்த விஷயத்தில் இரண்டும் ஒன்றே’ எனக் கூறினர்.

'INDIA' கூட்டணி

அழைப்பிதழ்களில் ‘பாரத்’ பெயர்!

இப்படியான சூழலில்தான், ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு ’இந்திய குடியரசுத் தலைவர்’ எனக் குறிப்பிடுவதற்குப் பதில், ’பாரத் குடியரசுத் தலைவர்’ எனக் குறிப்பிடப்பட்டு அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது (செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது) அதிர்வை ஏற்படுத்தியது.

அதாவது, வெறும் பேச்சளவில் இருந்த ‘பாரத்’ அழைப்பிதழ், இதன்மூலம் எழுத்து வடிவம் பெற்றதால், இதற்கு எதிராக அதிகளவில் விமர்சனங்கள் கிளம்பின. தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேஷிய பயண நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழ் வெளியானது. அதிலும், ’பாரத பிரதமரின் இந்தோனேஷிய பயண நிகழ்ச்சி’ என இடம்பெற்றிருந்தது மேலும் நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

’பாரத்’ குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து!

இதைத் தொடர்ந்து, நாட்டின் பெயர் ’இந்தியா’ என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்பட இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலரே, ’அரசியல் சாசனத்திலேயே பாரத் என்ற பெயர் உள்ளது. அதை எதிர்க்க முடியாது’ என கருத்து தெரிவித்திருந்தனர்.

ஜி20 உச்சிமாநாட்டிலும் இடம்பெற்ற ‘பாரத்’!

இந்தச் சூழலில், டெல்லியில் நடைபெற்ற (செப்டம்பர் 9) ஜி20 உச்சிமாநாட்டிலும் பிரதமர் மோடிக்கு முன் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையிலும் ‘பாரத்’ என இடம்பெற்றிருந்தது இந்திய அரசியலாளர்களை மட்டும், உலகத் தலைவர்களையே திரும்பிப் பார்க்கவைத்தது. இதனால் இணையங்களில் மீம்ஸ்களும் பறக்கத் தொடங்கின. அனைவரின் அடையாளமாக இருக்கும் ஆதார் கார்டு முதல் அனைத்து வங்கித் தரவுகளையும் காட்டும் பான்கார்டு வரை, பாரத் என மாறுமா என்று கேள்வி எழுப்பி மீம்ஸ்களைப் பறக்கவிட்டனர்.

மணிப்பூர் கலவரம்

பற்றி எரிந்த மணிப்பூர் கலவரம் - சிஏஜி அறிக்கை!

இப்படி, சமீபகாலமாகச் சனாதனம் - பாரத் பற்றிய கருத்துகள் வெடித்துவரும் சூழலில், கடந்த ஒருமாதத்துக்கு முன்பு மணிப்பூர் வன்முறையின் (இரு குழுக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதல்) பாதிப்புகளும், மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கையில் (சிஏஜி) வெளியான ஊழல் செய்திகளும் இணையதளங்களில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது கும்கி இனப் பெண்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இன்றுவரை தொடரும் மணிப்பூர் வன்முறை

கடந்த மே மாதம் முதல் நீடித்துவரும் இந்த வன்முறை இன்றுவரை தொடர்வதுதான் வேதனையான விஷயமாக இருக்கிறது. இன்றுகூட (செப்.13), மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் பணியிலிருந்த காவல் துணை ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆங்கோமாங் என்ற துணைக் காவலர் மர்ம நபர்களால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 போ் உயிரிழந்தனர்.

இப்படி மணிப்பூர் வன்முறை இன்றும் தொடரும் வேளையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சைப் புயலை உருவாக்கியது மத்திய அரசை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளையும் எழுந்து நின்று கேள்வி கேட்கவைத்தது.

ஏழு திட்டங்களில் முறைகேடு!

ஏழு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவே சுட்டிக்காட்டியிருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தில், ஏலம் விடுதலில் முறைகேடு, துவாரகா விரைவுப்பாதை கட்டுமானத்தில் முறைகேடு, சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் அதிக வசூல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரே தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்ட ஏழரை லட்சம் பயனாளிகளின் விவரங்கள், அயோத்யா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையற்ற சலுகைகள், மத்திய அரசின் விளம்பரங்களுக்காகச் செலவழிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கான பணம், ஹெச்.ஏ.எல். விமான எஞ்சின் வடிவமைப்பில் தவறு செய்த வகையில் பல கோடி ரூபாய் நஷ்டம்... என 7 விவகாரங்களில் நடைபெற்ற முறைகேடுகளை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

இதனால் எதிர்க்கட்சிகள் முதல் மீடியாக்கள் வரை இதுபற்றிய செய்திகள் தீப்பொறியாய்ப் பறக்கத் தொடங்கின. இப்படி, மணிப்பூர் பற்றிய வன்முறைச் செய்திகளும், சிஏஜியின் அறிக்கை வெளியிட்ட ஊழல் புகார்களும் தொடர்ந்து வைரலான நிலையில்தான், சனாதன பற்றிய கருத்துகளும், பாரத் பற்றிய செய்திகளும் உலாவந்து, அவற்றை (மணிப்பூர் மற்றும் சிஏஜி செய்திகள்) ஒன்றும் இல்லாமல் ஆக்கின. இல்லையில்லை, முற்றிலும் அணைக்கச் செய்துவிட்டன.

அரசியலில் காலந்தொட்டே பயணிக்கும் கைவந்தகலை!

ஒன்று புதிதாய் அறிமுகமானால், இன்னொன்று மறைந்துவிடும் என்பார்கள். அந்த நடைமுறை கருத்தியலிலும் உண்டு. அதற்கு மேற்கண்ட சம்பவங்களே உதாரணம். இன்று, உச்சத்தில் இருக்கும் ’பாரத்’ மற்றும் ’சனாதன’த்தின் கருத்துகள்கூட, நாளை வேறொரு பதிவாலோ அல்லது நிகழ்வாலோகூட மாறலாம். எனினும், மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனால் அந்த மாற்றமே சிலரை, மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்குகிறது அல்லது அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசுவதற்கு வழிவகை செய்கிறது. அதிலும், இப்படியான பதிவுகளோ, நிகழ்வுகளோ, கருத்துகளோ வைரலாவதற்கு முக்கியக் காரணம், தம்மிடம் இருக்கும் தவறுகள்தான்.

அதை மறைப்பதற்காக, குறிப்பாக அதுபற்றி பிறர் அதிகம் பேசாமல் இருப்பதற்காக, வேறொரு நிகழ்வுகளை எடுத்துப் பரப்பி விடுகின்றனர் அல்லது உருவாக்கி விடுகின்றனர். சில சமயங்களில் உண்மையான கருத்துகளோ, நிகழ்வுகளோ திரித்துக் கூறப்படுவதும் உண்டு; பொய் சொல்லப்படுவதும் உண்டு. ஆம், இந்த கைவந்தகலை, அரசியலில் காலந்தொட்டே பயணித்து வருகிறது.

இருப்பினும், நாட்டில் சரிசெய்து தீர வேண்டிய பிரச்னைகளை விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சரியான விஷயங்களை விவாதிக்கும் போதும் அதற்கான தீர்வுகளை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. மணிப்பூர் விவகாரம் நாட்டின் மிக முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று. அங்கு நடக்கும் உயிர்பலிகளை நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.