அலங்கார ஊர்தி புதிய தலைமுறை
இந்தியா

தமிழ்நாடு To கர்நாடகா: அலங்கார ஊர்தி சர்ச்சைகள்! அரசியலான கதையில் புதிய திருப்பம்-தீர்வு கிடைக்குமா?

கர்நாடக அரசின் ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பது அம்மாநில அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது

Prakash J

அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள்

ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இதையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாசாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளுக்கான தேர்வு, முந்தைய ஆண்டு செப்டம்பர் மாதமே தொடங்கிவிடும்.

தேர்வு செய்வது எப்படி?

குடியரசு தின அணிவகுப்பைப் பொறுப்பேற்று நடத்தும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம்தான் அலங்கார ஊர்திகளையும் தேர்வு செய்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு பொதுவான 'தீம்' வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அலங்கார ஊர்திகளை வடிவமைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொள்ளும். இதற்காக ஒவ்வொரு மாநிலத்திடமும் அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தப்படும். அதனடிப்படையிலேயே ஊர்திகள் தேர்வுசெய்யப்பட்டு அணிவகுப்பில் இடம்பெறும். அந்த வகையில், இதற்கென அமைக்கப்படும் குழு ஒன்று, ஊர்திகளை மதிப்பீடு செய்யும். அவர்கள் 6 - 7 கட்டங்களாக பரிசீலனை செய்வர். அதன்பிறகே எந்தெந்த ஊர்திகள் இறுதியாக அணிவகுப்பில் இடம்பெறும் எனத் தெரியவரும்.

2022இல் நிராகரிக்கப்பட்ட 3 மாநிலங்கள்!

அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசுத் தின விழாவில் நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இவர்கள் மூவரும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் மாநில முதல்வர்கள். இதனால்தான் அந்த மாநிலங்கள் நிராகரிக்கப்பட்டன என காரணம் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு, “எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை” என தெரிவித்திருந்தது. 2022ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் சார்பில், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெற்றிருந்தது.

தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அலங்கார ஊர்தி

எனினும், இதற்கென தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்டதால் அதே ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டதுடன், தமிழ்நாடு குடியரசுத் தின விழாவில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை. 2022இல்தான் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறவில்லை என்றாலும், அதற்கு முன்பு 2016, 2017, 2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகூட தமிழ்நாடு சார்பில் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.

கர்நாடக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு!

இந்த நிலையில், வரும் குடியரசுதின விழாவில் கர்நாடக மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு சார்பில், பெங்களூரு சர்வதேச விமான நிலைய மாதிரி மற்றும் பெங்களூரு நகர தெய்வமான அன்னம்மா தேவியின் சிலையுடன் அலங்கார ஊர்தி அமைக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. அணிவகுப்பில் இந்த ஆண்டு கர்நாடக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற அனுமதி இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனம் தெரிவித்த கர்நாடக முதல்வர்

ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால், இந்த முறை கர்நாடகத்திற்கு வாய்ப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேவைப்பட்டால், மாநிலங்கள் சார்பில் காட்சிக்கு வைக்கப்படும பொருட்களில், கர்நாடக அரசின் அலங்கார ஊர்தியை வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, “மாநில அரசின் வாய்ப்பை மத்திய அரசு மறுக்கிறது. காங்கிரஸ் ஆட்சி இருப்பதால்தான் இது நடைபெறுகிறது. கர்நாடாவின் அலங்கார ஊர்தியை மறுத்ததன் மூலம் 7 கோடி கன்னட மக்களையும் மத்திய அரசு இழிவுபடுத்திவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

நிராகரிக்கப்பட்டு மீண்டும் அனுமதி தந்த மத்திய அரசு

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முதலில் மறுப்பு தெரிவித்தது. பிறகு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் சிறப்பு அனுமதியைக் கொடுத்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்று கவுரவிக்கப்பட்டு இருந்தது. அந்த ஆண்டு கர்நாடக ஊர்தி நிராகரிக்கப்பட்டபோது அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, பிரதமர் மோடி இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.

அதன்பின்னரே, கர்நாடக மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கு, கர்நாடக மாநிலத்தில் அப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடைபெற்றதுடன், அம்மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருந்ததும் நினைவுகூரத்தக்கது. இத்தகைய சூழலில்தான், இந்த ஆண்டு கர்நாடக அரசின் ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பது அம்மாநில அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. அதுபோல் இந்த ஆண்டு பஞ்சாப் ஊர்தியும் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், தொடர்ந்து சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும், பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

அலங்கார ஊர்திக்கான புதிய தேர்வு செயல்முறை!

இதுகுறித்து நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ள நிலையில், தற்போது அலங்கார ஊர்திக்கான புதிய தேர்வு செயல்முறை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, குடியரசுதின விழாவில் தங்களது அலங்கார ஊர்தி இடம்பெறவில்லை என்று ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்கள் தெரிவிக்கின்றன. அந்த பிரசனைக்கு தீர்வுகான புதிய முறை அமல்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில், புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனை சரிசெய்யும் வகையில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமும் தங்களது அலங்கார ஊர்தியை இடம்பெறச் செய்ய அனுமதிக்க முடிவு செய்யபட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்தின் அலங்கார ஊர்திகளும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அணிவகுப்பில் பங்கேற்கும் வகையில் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது குறித்து மத்திய அரசுடன் 28 மாநிலங்கள் உடன்பாடு செய்துள்ளன.