பாஜக file image
இந்தியா

மக்களவை தேர்தல்| அறிவிப்பு..வாபஸ்..ரிப்பீட்டு! அடுத்தடுத்து விலகும் வேட்பாளர்கள்; கலக்கத்தில் பாஜக?

பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பின் வாபஸ் பெற்றவர்களும், பட்டியல் வெளியாவதற்கு முன்பே தாம் போட்டியிட விருப்பமில்லாமல் தெரிவித்தவர்களின் விவரங்களையும் இங்கு பார்ப்போம்.

Prakash J

குஜராத்: விலகிய 2 பாஜக வேட்பாளர்கள்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள அனைத்துக் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டை முடித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேர்தல் பணிகளில் வேகம்காட்டி வருகின்றன. குறிப்பாக, தேர்தலுக்காக மாநில மற்றும் தேசியக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

பிகாஜி தாக்கூர்-ரஞ்சன் பட்

இந்த நிலையில், பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பின் வாபஸ் பெற்றவர்களும், பட்டியல் வெளியாவதற்கு முன்பே தாம் போட்டியிட விருப்பமில்லாமல் தெரிவித்தவர்களின் விவரங்களையும் இங்கு பார்ப்போம்.

குஜராத்தில் பாஜக சார்பில் வதோதரா தொகுதியில் சிட்டிங் எம்பியான ரஞ்சன் பட்-டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அங்கு அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், தாம் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். அதேபோல், சர்பகந்தா மக்களவைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பிகாஜி தாக்கூர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையும் படிக்க: ரோகித் Vs ஹர்திக்! அசிங்கப்படுவது யார்? சென்னை அணியை பார்த்தும் திருந்தாத மும்பைஅணி! யார் மீது தவறு?

உத்தரப்பிரதேசம்: விலகிய 2 வேட்பாளர்கள்

குஜராத்தில் 2 பாஜக வேட்பாளர்கள் விலகிய நிலையில், உத்தரப்பிரதேசத்தில் அதே கதை தொடர்ந்தது. அங்கும் 2 வேட்பாளர்கள் விலகுவதாக அறிவித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மக்களவைத் தொகுதிக்கு மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் சிட்டிங் எம்பியான உபேந்திர சிங் ராவத். ஆபாச வீடியோ தொடர்பாக தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், அரசியலில் இனி போட்டியிடப் போவதும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதுபோல், கான்பூர் மக்களவைத் தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிட்டிங் எம்பியான சத்யதேவ் பச்சௌரி, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதுபோல், உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத் தொகுதியில் போட்டியிட்டு இணையமைச்சரான வி.கே.சிங், வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தலைமைக்குத் தெரிவித்திருந்தார்.

வி.கே.சிங்

முன்னதாக விலகிய கவுதம் காம்பீர், ஹர்ஸ்வர்தன்

இவர்களைத் தவிர, மேலும் சிலரும் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், கிரிக்கெட் தொடர்பாக மீண்டும் கவனம் செலுத்தப் போவதால் அரசியல் இருந்து விலகுவதாக கவுதம் காம்பீர் தெரிவித்திருந்தார். இவர் கிழக்கு டெல்லி தொகுதியிலிருந்து எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவரைத் தொடர்ந்து டெல்லி சாந்தினி சவுக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்ஸ்வர்தனும் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். மீண்டும் மருத்துவப் பணியில் ஈடுபடுவதாகக் காரணம் தெரிவித்திருந்த இவர், முன்னாள் அமைச்சர் ஆவார்.

இதையும் படிக்க: இமாச்சல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்எல்ஏக்கள்.. பாஜகவில் ஐக்கியம்.. தேர்தலில் போட்டி?

தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பிக்கள் காங்கிரஸில் ஐக்கியம்

இவர்களுக்கு அடுத்தபடியாக முன்னாள் மத்திய அமைச்சரும், ஹசாரிபாக் பாஜக எம்.பியுமான ஜெயந்த் சின்ஹாவும், தாம் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதுபோல், ராஜஸ்தானின் சுரு தொகுதி பாஜக எம்.பி. ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துடன், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அடுத்து, கர்நாடகா சிக்கபல்லாப்பூர் தொகுதி பாஜக எம்.பியான பச்சேகவுடாவும் அக்கட்சியில் இருந்து விலகியிருந்தார்.

ஜெயந்த் சின்ஹா

மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த அஜய் பிரதாப் சிங்கும், அக்கட்சியில் இருந்து விலகினார். அவருக்கு மக்களவைத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாததாலேயே பாஜகவில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. ஹரியானா மாநிலம் ஹிஸார் தொகுதி எம்.பியான பிரிஜேந்திர சிங்கும் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் ஹெம்ப்ராம் ஜார்கிராமில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பியான குனார் ஹெம்ப்ராம், மக்களவைத் தேர்தலுக்கு முன், தனிப்பட்ட காரணங்களுக்காக, கட்சியில் இருந்து விலகினார். இதேபோல், முன்னதாக மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பாஜக எம்பியான பவன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் இருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: “பிடிவாதத்தை விட்டுவிடுங்க; இந்தியாவின் உதவி வேணும்”- மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அட்வைஸ்!

இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி பலரும் பாஜகவில் ஐக்கியம் ஆகி வருகின்றனர். அதற்கு மிக சமீபத்திய உதாரணம், பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்பி ரன்வீத் சிங் பிட்டு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். லுதியான தொகுதி எம்பியான இவர், முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் பீண்ட் சிங்கின் பேரன் ஆவார். இவர் மூன்று முறை எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டவர்.