அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர்
இந்தியா

”நேர்மையான விசாரணை வேண்டும்” நேற்று ஜெர்மனி.. இன்று அமெரிக்கா; கெஜ்ரிவால் கைதில் உலகநாடுகள் கருத்து!

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர்!

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 7 நாட்கள் விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தவாறே அரவிந்த் கெஜ்ரிவால், துறைரீதியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் கெஜ்ரிவால் கைதுக்குப் பின்னர் முதன்முறையாக டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது, மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் முகமூடியை அணிந்து ஆத் ஆத்மி எம்எல்ஏக்கள் சட்டசபையில் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

இதற்கிடையே டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரியும் மற்றும் காவலில் வைத்து விசாரிக்கும் உத்தரவுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கெஜ்ரிவாலின் கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்றும் அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அவரது வழக்கறிஞர் குழு தெரிவித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று (மார்ச் 27) டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடைக்கால நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க: மஹுவாவை சாய்க்க பாஜக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம்.. களமிறக்கப்பட்ட ராஜமாதா.. யார் இந்த அம்ரிதா ராய்?

டெல்லியில் ஆம்ஆத்மியும் பாஜகவும் தனித்தனியாகப் போராட்டம்

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது விவகாரம் பேசுபொருளாகி வருகிறது. குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று பாஜகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இவ்விவகாரம் அயல்நாடுகளையும் ஆட்கொண்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள பதிலில், "கெஜ்ரிவால் கைது தொடர்பான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு கவனித்து வருகிறது. இந்த வழக்கில் நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதையும், சிறையில் உள்ள டெல்லி முதல்வருக்குச் சரியான நேரத்தில் சட்ட உதவி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள தூதரகத்தின் துணை தலைமை அதிகாரி குளோரியா பார்பெனாவுக்கு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து குளோரியா பார்பெனா, டில்லியின் தெற்கு பிளாக்கில் உள்ள வெளியுறவு அமைச்சகம் முன்பு ஆஜரானார்.

இதையும் படிக்க: அம்மாவுக்கு மீண்டும் சீட்... மகனுக்கு NO.. கழட்டி விடப்பட்ட வருண் காந்தி.. சுயேட்சையாக போட்டி?

அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு

இதுகுறித்து மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கருத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தோம். தூதரகரீதியில், அமெரிக்கா மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் உள்நாட்டு விவகாரத்திற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஜனநாயக நாடுகளில் இந்த விவகாரங்களில் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லை என்றால், முன்னெப்போதும் இல்லாத நடைமுறை உருவாகக்கூடும். இந்தியாவின் சட்ட நடவடிக்கைகள், சுதந்திரமான நீதித்துறையைச் சார்ந்தது. அது சரியான நேரத்தில் முடிவு எடுக்கும். அதன்மீது கருத்து தெரிவிப்பது தேவையற்றது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கெஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகமும் கருத்து தெரிவித்திருந்தது. ’’இந்த வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள் பின்பற்றப்படும்’’ என்று கருதுவதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கூறி ஜெர்மனி அரசுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மாண்டியாவில் களமிறக்கப்பட்ட குமாரசாமி; பாஜக கைவிட்டதால் கடும் அதிருப்தியில் சுயேட்சை எம்.பி சுமலதா!

’நாளை நீதிமன்றத்தில் அனைத்தையும் தெரிவிப்பார்’ - சுனிதா

இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை அவருடைய மனைவி சுனிதா நேற்று (மார்ச் 26) மாலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா, “மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை சுமார் 250-க்கும் அதிமான சோதனைகளை நடத்தியுள்ளது. ஊழல் எனச் சொல்லி அவர்கள் பணத்தைத் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (மார்ச் 28) நீதிமன்றத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார். மதுபான ஊழல் வழக்கின் பணம் எங்கே சென்றது என்பதைத் தெரிவிப்பார். அனைத்து ஆதாரங்களையும் அளிப்பார்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு 46 ஆக குறைந்துள்ளது, இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: “பிடிவாதத்தை விட்டுவிடுங்க; இந்தியாவின் உதவி வேணும்”- மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அட்வைஸ்!