உத்தரப் பிரதேசம் முகநூல்
இந்தியா

உ.பி | தாய்க்கு 12 வயதில் நடந்த பாலியல் வன்கொடுமை; 30 ஆண்டுகளுக்கு பிறகு நீதி பெற்று கொடுத்த மகன்!

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப் பிரதேசத்தில், தனது தாய்க்கு 12 வயதில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமாக இருந்த குற்றவாளிகளுக்கு, மகன் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டில் 12 வயதான சிறுமி ஒருவர் திருமணமான தனது சகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். அவ்வீட்டில் வசித்து வந்த சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவர் இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால், வேலைக்கு சென்றுவிடும் நிலையில், இச்சிறுமி வீட்டில் தனியாக இருப்பது வழக்கமாக இருந்துள்ளது. இதனை அறிந்துகொண்ட அதே பகுதியில் வசித்து வந்த நகி மற்றும் குட்டு என்னும் இருவரும் ஒருநாள் இச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுது காலத்திற்கு பிறகு சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்ட சிறுமியின் சகோதரி மற்றும் அவரின் கணவர் இருவரும், குற்றவாளிகளின் அச்சுறுத்தல் மற்றும் குடும்ப மானத்திற்கு அஞ்சி வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் இதை அப்படியே விட்டுள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை உறவினர் ஒருவரிடம் கொடுத்து வளர்த்துள்ளனர். பின்னர், சிறுமியை ராம்பூருக்கு அனுப்பி வைத்த சகோதரி உண்மையை யாரிடமும் கூறாமல், சிறுமிக்கு வேறு திருமணமும் செய்து வைத்துள்ளார்.

தொடர்ந்து ஆண் குழந்தையும் வளர்ந்து வரவே, கடந்த 2021 ஆம் ஆண்டு, தனது தாய்க்கு நேர்ந்த கொடுமையை அறிந்து எப்படியாவது தனது தாய்க்கு நீதி பெற்று தர வேண்டும் என்று நினைத்துள்ளார் அப்பெண்ணின் மகன்.

இதன்படி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு எதிராக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு,டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் உண்மை வெளியில் வந்துள்ளது.

இதனால், குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ 30,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை அன்று இவ்வழக்கானது முடிவுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தெரிவிக்கையில்  ‛நான் நீண்ட காலமாக பயத்துடன் வாழ்ந்து வந்தேன். தற்போது என் மகன் எனக்கு மன வலிமையை கொடுத்தும், குற்றவாளிகளுக்கு தண்டனையையும் பெற்று தந்துள்ளார்' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.