18வது மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. அதாவது, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்துள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைந்துள்ளது.
இதையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி, நேற்று தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 71 மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 11 பேருக்கும் மத்திய அமைச்சர் பதவிகளை பாஜக வழங்கியுள்ளது. தொடர்ந்து, யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பது மீதான எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் சில முக்கியத் துறைகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின. காரணம், அந்த இரு கட்சிகள் உள்பட கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த துறைகள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’சபாநாயகர் பதவி தங்களுக்கே வேண்டும்’ எனக் கேட்டு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சபாநாயகர் பதவியை அவர்களுக்கு தர பாஜக விரும்பவில்லை என தெரிகிறது. இதனிடையே, சபாநாயகர் பதவிக்கான தேர்தல் வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் பதவியை வானளாவிய அதிகாரம் படைத்த அரசியல் சாசனப் பதவி எனக் குறிப்பிடுவார்கள். இந்தியாவின் ஆட்சிப் பீடமாகத் திகழும் நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கமான மக்களவையை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சபாநாயகர். இவரது கைவிரல் அசைவில்தான் அவையின் ஒவ்வொரு நகர்வும் அரங்கேறும். குறிப்பாக, அவையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாதபோது சபாநாயகரின் முடிவுகள் மிகமிக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். எனவேதான் அப்பதவி தற்போதை சூழலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, சபையை நடத்தும் ஒருவர் என்ற வகையில், சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். ஆனால், ஏதேனும் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரே மதிப்புமிக்க சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மக்களவை சபாநாயகர், எம்.பிக்களின் வாக்களிப்பு பெரும்பான்மை பலத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் போட்டியில் எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவிக்காவிட்டால் வாக்களிப்பு இல்லாமல் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு மக்களவை தேர்தலின்போதும், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருந்ததால் தங்கள் கட்சியைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜனையும், ஓம் பிர்லாவையும் முறையே சபாநாயகராக நியமித்தது. ஆனால், இம்முறை சபாநாயகர் பதவிக்கு கூட்டணிக் கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் சபாநாயகர் பதவி தங்கள் கட்சியிடம் இருந்தால் அது ஒரு துருப்புச் சீட்டு எனப் பார்க்கிறார்கள். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளின்போது சபாநாயகர் முடிவே இறுதியானது.
முன்னதாக, மக்களவை சபாநாயகர் குறித்து முடிவு செய்ய கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக வரும் 12ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. இந்த சூழலில், என்டி ராமாராவின் மகளும் பாஜக எம்பியுமான தகுபதி புரந்தேஸ்வரிக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படாததால் மக்களவை சபாநாயகராக அவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. புரந்தேஸ்வரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்தால், ஆந்திர மாநிலம் மேலும் வளர்ச்சி பெறும் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான நடிகர் என்.டி.ராமராவின் மகளான புரந்தேஸ்வரி, தற்போது ஆந்திர மாநில பாஜக தலைவராக உள்ளார். இவருடைய சகோதரியான புவனேஸ்வரியைத்தான் ஜூன் 12ஆம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு மணம்புரிந்துள்ளார். தொடக்கத்தில், புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து அமைச்சர் மற்றும் எம்.பி பதவிகளை வகித்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி கொஞ்ச காலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
அந்தச் சமயத்தில்தான் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பாஜக, இவரை மாநிலத் தலைவராக்கியது. புரந்தேஸ்வரி மாநில தலைவராக பதவி ஏற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவரது நடவடிக்கையால் ஆந்திராவில் பாஜக அபார வளர்ச்சி அடைந்தது. தவிர, நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியையும் பிடித்துள்ளது. மேலும், புரந்தேஸ்வரி ராஜமுந்திரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.